Tuesday, 5 January 2016

என் இன்னுயிர் தோழி!

என் இன்னுயிர்
தோழி!

    நீ இதிகாச நாயகி பாத்திரங்களில் எதிலும்
நிச்சயமாய் உன் பிம்பத்தை வடித்துக்
கொள்ளவில்லை. வானவில்லின் எந்த ஒரு
வண்ணத்திலும் உன்னை
ஒளியூட்டிக்கொள்ளவில்லை. இயல்பாகவே
உன்னில் நீலம் அதிகம் என்றாலும் நீ அதிகம்
சொல்லிக்கொண்டதில்லை.
உன்னிலிருந்து பரவும் வாசம்-பாசம்-
என்னவென்று சொல்வது?
இதுவரை, துல்லியத்தின் விழுமியங்களோடு எந்த
சைத்ரிகனின் தூரிகையும் உன்னை வடிக்கவில்லை. அலை
அலையாய் கரு நீல நிறத்தில் உன் கேசமும், சற்றே
பூசியதுபோல் சதைத் திரட்சியும், சற்றும் வெப்பத்தைத்
தாங்க இயலாது எப்போதும் ஜன்னல் திறந்து
மெல்லிய குளிர்ந்த காற்றின் இன்பத்தை நீ
நுகர்வதும்- அதற்காய் ஏங்குவதையும் நான்
அறிவேன். இப்படி அழைக்கலாமா?
என்
மதிப்பிற்குரிய மென்மையான
பெண்மணியே !
 எளிதில் துணுக்குறுவதும், கண்
கலங்கிவிடுவதும் உன் சுபாவமென இரு
நூறு வருடங்களாய் நீ குழவியாய் தவழ்ந்த
காலந்தொட்டே சரியான புரிதலுண்டு
எனக்கு.
புத்தெழுச்சிக்காலக் கலைஞர்கள் உன்னைப்
புரிந்துகொள்ளவில்லை. ஏதோ குழந்தைகளின்
மரப்பாச்சி பொம்மையைப் போல் உன்னைக்
கொஞ்ச காலம்
ஒளித்துவைத்துவிட்டார்கள். அவர்களின் அக்கறை
அவ்வளவே! அதுவும் நல்லது தான். சரித்திர
அதிர்வுகளில் எழும்பிய எந்த தூசியும் உன் மீது
படியவில்லை.
பின் நவீனத்துவ புத்திசாலிகளின் கிட்டப்பார்வை
தடுமாற்றத்தில் உன் இருப்பு அவர்களது
பதிவுகளில், சொல்லாடல்களில்,
அவதானிக்க இயலாமல் போயிற்று.
பெண்ணியவாதிகளுக்குக்கூட உன் சகோதரியின்
பிம்ப மயக்கத்தில் ஆழ்ந்துபோனதால், உன்னை
கவனம் கொள்ளவில்லை.உன் கடைசிச் சகோதரி
ஸெபியாவை அவர்கள் தீவிரமாய்க்
காதலித்ததால் உன்னைப் புறக்கணித்துவிட்டனர்.
எல்லாம் பிம்ப மயக்கம்...அவளையும் உன்
மூத்தவள் ப்ளாட்டினா இருவரை மட்டுமே உலக
மேடைகளெங்கும் அரங்கேற்றினர் உன்னைக்
கண்டுகொள்ளவே இல்லை.
ரத்த புஷ்டியாய், உன் பொய்த்தோற்றம்.
இந்த இரு நூறு வருடங்களில், நீ பருவமடைந்த
காலத்திலிருந்து, பசலை
நோயும்,பொருத்தப்பாடற்ற மாதவிடாயும்,
குருதித் தேக்கமும், ரணமும் வலியும், உன் ஆளுமையை ஒரு
புறம் சிதைத்துக் கொண்டேயிருந்தாலும்
உன்னில் ஆதிக்க உணர்வுகளும், வன்முறையும்
கிஞ்சித்தும் இறங்கவேயில்லை. மூன்று
சகோதரிகளுக்கிடையில் உன் அன்பின் வீச்சம் எப்போதும்
உன்னை விட்டுக்கொடுத்தே போகச்
செய்திருக்கிறது. முடிவெடுக்கும்
சுதந்திரங்களை மற்றவர்களுக்காக
துறந்திருக்கிறாய். சாம்ராஜ்ஜியக் கனவுகள்
உன்னிடம் இல்லை. அன்பை மட்டுமே பிறரிடம்
எக்கணமும் யாசித்திருக்கிறாய்.
எதிர்கொண்ட காயங்களில் ஊண் நீர்
வடியும்போதும் கூட எப்படி உன்னால், மனதில்
எரிச்சலைத் தேக்கிக் கொண்டே மிதியடிபோல்
எல்லோரும் நடந்துபோகக் கிடந்துவிட முடிகிறது.?
நானே பயந்திருக்கிறேன் – எங்கே, இனம்
கண்டுகொள்ள முடியாமல் தளுக்குப்
பேச்சுக்காரர்களின் வலையில் எளிதாய்
விழுந்துவிடுவாயோயென்று? மெல்லிய
காற்று வீசலைக்கூட தாங்க முடியாமல்
வளைந்துவிடும் சுபாவம் உனது. ஆண்களை
உன்னால் எதிர்கொள்ளவே இயலவில்லை.
இந்தக்காலத்தில் கூட உனக்கு ஆண்கள்
என்றாலே பயம்.
யாசிக்கும் அன்பு கிட்டாத தருணம் , எல்லோராலும்
கைவிடப்பட்டு வெண்ணிலையாக நிற்பதாய்
உணர்வாய். தனிமையை உன்னால் தாங்க
இயலாது. இதமான வருடலுக்காகவும், இரக்கம்
தோய்ந்த சொற்களுக்காகவும்,
வெப்பமான ஆரத் தழுவலுக்காகவும்
தவமிருப்பதே உனக்கு சாத்தியம்.
எப்போதும் எளிதாக உன்னை உப்புமூட்டை சுமக்கும்
விளையாட்டையே குழந்தைப்பருவத்தில் அதிகம்
விரும்பினாய். அடிக்கடி , உடலின் வலி
ஒவ்வொரு இடமாகத் தாவுவதாக
துன்புறுவாய். உன் மன நிலை மாற்றம் போல் உன்
உடல் உபாதைகளும்
மாறிக்கொண்டேயிருக்கும்.
பார்க்க வேடிக்கையாயிருக்கும்!
நீ தூங்கும்போது!
தலைக்குக்கீழாய் கையை சும்மாடு கொடுத்தோ
அல்லது நெற்றிமேல் கிடத்தியோ ஒயிலாகத்
துயில்வாய்! ரொம்பப் படுத்துவாய்
வீட்டிலுள்ளவர்களை. நீயாக சாப்பிட மாட்டாய்-
யாராவது வற்புறுத்த வேண்டும்- ஒரு தடவைக்கு
ரெண்டு தடவை சொன்னால்
சாப்பிடவாவது செய்வாய். ஆனால்
தண்னீர் மட்டும் குடிப்பதே இல்லை. ஆமாம் உனக்கு
மட்டும் தாகமே எடுக்காதா என்ன? எப்படி இருக்க
முடிகிறது உன்னால்?
சாயங்கால வேளைகளில் ”வாசற்படியில் பூதம்
வந்து நிற்கிறது பயமாயிருக்கு” என்று
சொன்ன நாட்கள் அதிகம். எளிதில்
பதட்டப் படுவாய். கைகள் உதறும். உடலின்
வலப்புறம் மட்டும் உனக்கு வேர்ப்பதைப்
பார்த்திருக்கிறேன். ரகசியமாய்
பொறாமைகளை உனக்குள் புதைத்து
வைத்திருப்பாய்.
உன் விநோதமான எண்ணங்களை என்னிடம்
சொல்லியிருக்கிறாய். கண்ணை மூடினால்
போதும் ஏதேதோ உருவங்கள் என் முன் வந்து போகிறது
என்பாய்.
ஒரு சமயம்- உன் இரவு உடைகளை
அணிந்துகொண்டு யாரோ ஒருவன் –
அந்நியன்- உன்படுக்கையில் கிடப்பதாய்
சொல்லிக்கொண்டிருக்கும்போதே
ஓவென்று அழுதுவிட்டாய். எப்பவும் பயம்.
என்ன ஜென்மம் நீ தோழி?
உன் கைகளைப் பிடித்துக்கொண்டு யாராவது
தெரிந்தவர் ஆறுதல்
சொல்லிக்கொண்டிருந்தால் நீ
சிறகடிக்க ஆரம்பித்துவிடுவாய்! கொஞ்ச
நேரமாவது!.இல்லையென்றால் பயத்தில்
ஜெபிக்க ஆரம்பித்துவிடுவாய்.
நெட்டுருப்பண்னி வைத்திருக்கும் மந்திரங்களை
வாய் தானாக முனுமுக்கும் நான் உன்னைப்
பார்த்துக் கொண்டே இருப்பேன்!
உன் கனவுகளை நடுங்கிக்கொண்டே
சொல்லியிருக்கிறாய் என்னிடம்- ஒரு
நாள் ஒர் கறுப்பு நாய் கன்னங்கரேலென்று
உன்னைத்துரத்துகிறது. ஓடுகிறாய் சிலசமயம் அது
கறுத்த பூனையாகவும் இருக்கலாம். தேனீக்கள்
சூழ்ந்துகொண்டு உன்னைத் துரத்துகிறது.
பயத்தில் உனக்கு உடல் வெடவெடக்கும்-
தலை சுற்றும். வாந்தி!அழுகை கண்ணில் நீர்
முட்டிக்கொண்டு நிற்கிறது.
என் அன்புத்தோழி! உன்னைப்
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்-
உன்னைப்பற்றி சிந்தனைகள் மனத்தில்!
என் குடும்பத்தாரும் சுற்றமும் நட்பு வட்டமும்
ஆச்சரிய மிகுதியில் உன் பெயரைக் கேட்டுத்
தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றனர்.
என்னில் நீங்காத இடம்பெற்றுவிட்ட உன்னைப்
பார்க்கவேண்டுமாம் அவர்களுக்கு!
சொல்லவா? உன் பெயரைச்
சொல்லிவிடவா? உன்னை ஒருமுறைப்
பார்த்துவிட்டால் அவர்களுக்குக் குதூகலம்
வந்துவிடும். நீ எங்கிருந்தாலும் உன்னை எளிதில்
அடையாளம் கண்டுகொள்வார்கள்.
நிச்சயம் உன்னைப் பிடித்துவிடும். உன் உதவி
அவர்களுக்கு அதிகம் தேவைப்படலாம்.
ஒருவேளை என் அதிகப்பிரசங்கி ஓவிய நண்பன் உன்னை
வரைந்து பக்கத்தில் இரண்டு அன்னப்பறவைகளையோ
அல்லது அவனுக்கு அதிகம் எளிதில் வரையவரும்
இரண்டு யானைகளையோ மலர் தூவச்செய்து
சித்திரம் வரையலாம். ஸர்ரியலிஸம் அறிந்தவன்
உன்னைச் சுற்றி காற்றை குறிப்பாய் உணர்த்தி
உன்னில் ஒரு சூரியனையும் வரையலாம்.
ஒரு கவிஞன் கவிதை எழுதி பாலக்ருஷ்ணனாய்
உன் வாய் பிளக்கச் செய்து வெள்ளை
படிந்த உன் நாவை வெண்ணையுண்டதற்கு
குறியிட்டு சொல்லலாம் போகட்டும்
அவரவர்க்குத்தெரிந்ததை அவரவர்
சொல்லட்டும்.
சரி! மெத்தச் சரி! கடைசியாக தோழி உன்
பெயரை உன் அனுமதியுடன்
சொல்லப்போகிறேன்.
எல்லோரும் கேட்கும்படி உரத்துச் சொல்கிறேன்.
என் இரு நூறு வருடத் தோழி வேறு யாருமல்ல.
--
--
--
--
--
பல்சட்டில்லா!
 அதுதான் அந்த ஆளுமையின்
பெயர். இப்போது தெரிகிறதா
யாரென்று?
அலாஸ்கா என்ன? வ்ளாடிவாஸ்டக் என்ன?
க்வீன்ஸ்லாந்தாய் இருந்தாலும் சரி!
கூப்பாச்சிக்கோடையாய் இருந்தாலும் சரி !
எங்கெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ
அங்கெல்லாம் என் தோழி பல்சட்டில்லா
இருப்பாள். அவர்கள் எளிதாக அடையாளம்
கண்டுகொள்வார்கள். ஜெர்மனியில்
என் ஆகப் பழைய நண்பன் - தாவரவியல் நிபுணன்
அம்மாநிலத்தின் தலைமை நீதிபதியுங்கூட அவன்
ஷயரோகம் கண்டு இருமி இருமி ரத்தம்
துப்பிக்கொண்டு கோழையோடும் சுரத்தோடும்
படுக்கையில் சுருண்டு கிடந்தபோது இவளே- என் அன்புத்
தோழியே- அவனுக்கு உறுதுனையாய்,
ஒற்றைத்தேவதையாய் உதவிசெய்து,
அற்புதமென எல்லோரும் ஆர்ப்பரிக்கும்படி
அவனை- என் ஆகப் பழைய ஆருயிர் நண்பன் கார்ல்
வானை நலமாக்கினாய்.
இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.
ஓய்வெடுக்கவேண்டும். ஒரு சில
மணித்துளிகளாவது என் தோழிபோல் என் கையை தலைக்கு
அண்டக்கொடுத்து ஒய்யாரமாய்,
விஷ்ராந்தியாய் படுக்கப்போகிறேன். அவளை எந்த
விஷயத்திலும் போலி செய்ய இயலாது. சும்மா
ஒரு பாவனைதான்.
Dr.Ravichandaran.
Wed, 19 Aug 2015, 10:22 AM - Balasubramanian: 👏👏👍பல்சடில்லா கவிதை!
Wed, 19 Aug 2015, 10:24 AM - Murali Castro: யார் அந்த தேவதை! ??
Wed, 19 Aug 2015, 10:29 AM - Ravichandaran: நன்றி முரளி! பீட்டர் சாப்பலின் படிமத்தோடு என் வரிகளையும் சேர்த்துப்படிக்கும் வாய்ப்பைத்தந்தமைக்கு நன்றி
பல்சட்டிலா எக்காலத்தும் தேவதைதான் .
Wed, 19 Aug 2015, 10:33 AM - Karuppaiah Dr: 👏
Wed, 19 Aug 2015, 10:34 AM - Ravichandaran: கார்ல் வான் போயனிங்காஸனுக்கு காசநோய் தாக்கியபோது மரு.வேஹே அவர்களால் பல்சட்டிலா கடிதப்போக்குவரத்திலேயே பரிந்துரைக்கப்பட்டு முற்றிலுமாக்க் நலமடைந்தார்!
Wed, 19 Aug 2015, 10:36 AM - Ravichandaran: மரு. வேஹே தான் புதிய மருத்துவ அறிவியல் துறையாக ஹோமியோபங்ச்சர் முறைமையைக் கட்டமைத்தவர்
Wed, 19 Aug 2015, 11:06 AM - GOVINDRAJ Dr: 👏👏👏🌺
Wed, 19 Aug 2015, 12:51 PM - Ravichandaran: பீட்டர் சாப்பல் , வித்தல்காஸின் மாணவர், இங்கிலாந்து ஹோமியோபதியர்.
இவரது புகழ்பெற்ற நூல்
Emotional healing with homeopathy
Treating the effects of TRAUMA.
தென்னாப்பிரிக்காவில் குடியேறி, ஹோமியோ சிகிச்சை நிறுவனம் தோற்றுவித்து, எய்ட்ஸ் மற்றும் கடும் மலேரியா இரண்டு நோய்களின் சிகிச்சையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். மருந்துத் தேர்வுகளை ,முறைமைகளை, தன் ஆராய்ச்சியினஅடிப்படையிலேயே செயல்படுத்துவதால் மருந்தின் பெயர்களை PC 1,pc2, என அழைக்கிறார்
Wed, 19 Aug 2015, 12:51 PM - Ravichandaran: it is natural that anything that has existed for a long time becomes out of date,at least in its interpretation while the basics remain true.this has happened to homeopathy. Most of the homeopathic literature is more than hundred years old and although some of of is still sound, much is a repetition of past dogmas relating to nineteenth century ways of thinking.  Most important, homeopathy developed before depth psychology and was thus naive in many respects because its lack of psychotherapeutic understanding. The cross fertilisation of the two disciplines is now taking place and this book is , I hope, a small step in this process.
Wed, 19 Aug 2015, 12:51 PM - Ravichandaran: அவரது நூலில், பக்கம் 97-கீழே தருகிறேன்
என்னை ஆழமாய் தாக்கிய வரிகள். யோசிக்கவைத்த வரிகள்
Wed, 19 Aug 2015, 12:51 PM - Ravichandaran: எனவே, உளவியலின் வளர்ச்சி, ஹோமியோ அறிவியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என யோசிக்க வைத்தது.
Wed, 19 Aug 2015, 12:51 PM - Ravichandaran: இவ்வரிகளால் நான் பெற்ற தாக்கம் என்னை வெகுவாக பாதித்தது் அப்பொழுதுகள் ஒரு சிலை உடைப்பு எனக்குள் நடந்த கணங்கள்.
மருத்துவ அறிவியல் வரலாற்றில், ஹானெமனின் கலக்க்குரல், நான் மிகவும் நேசிக்கிற ஒன்று. அறிவு வளர்ச்சிக்கட்டம், அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகும் வரை எவராலும் சாதிக்க முடியாத ஒன்று.
Wed, 19 Aug 2015, 12:51 PM - Ravichandaran: ஆசான் மரு. ராசாமணி ஐயாவின் ஹோமியோபதி இயங்கியல் எனக்கொரு கண்ணோட்டத்தை வழங்கியிருந்தது
Wed, 19 Aug 2015, 12:51 PM - Ravichandaran: என் நண்பரும் நாடகாசிரியரும், இதழியலாளருமான திரு . ராசேந்திர சோழன் தனது  பின் நவீனத்துவம் பித்தும் தெளிவம் எனும் நூலில் , ஹோமியோபதி அறிவியலின் பன்முகத் தன்மையையும்,கலக க்குரலையும், அது நிகழ்த்திய அல்லோபதி அறிவியலின் மைய உடைப்பையும் விளக்கியிருந்த்து எனக்கு உதவியது.
Wed, 19 Aug 2015, 12:51 PM - Ravichandaran: உளவியல்,ஹோமியோபதி இரண்டின் சங்கம்ம் தோற்றுவிக்கும், பரிணாம வளர்ச்சியை, இயங்கியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
ஹோமியோபதியின் பன்முகத்தன்மையை நிலை நிறுத்திக் கொள்ளும் அதேசமயம், எவை அடிப்படை விதிகள், எவை பயன்பாட்டுக்கொள்கைகள், எவை புதிய கண்ணோட்டங்கள், அவதானிப்புகள்,, கருத்தரங்க விகசிப்புகள்,எவைஉள்ளீடற்ற பம்மாத்துகள் என அடையாளம் காணவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது
Wed, 19 Aug 2015, 12:51 PM - Ravichandaran: நான் எனக்குள் தோன்றிய , கேள்விகளின் அடிப்படையில்" உளவியல் நந்தவனத்திலசிறகடித்துப் பறக்கும் ஹோமியோ வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய எனது புரிதலை ஆழப்படுத்திக் கொண்டேன் என் புரிதல் ஒரு கட்டுரை வடிவம் கொண்டது.
Wed, 19 Aug 2015, 12:52 PM - Ravichandaran: உளவியல்,ஹோமியோபதி இரண்டின் சங்கம்ம் தோற்றுவிக்கும், பரிணாம வளர்ச்சியை, இயங்கியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
ஹோமியோபதியின் பன்முகத்தன்மையை நிலை நிறுத்திக் கொள்ளும் அதேசமயம், எவை அடிப்படை விதிகள், எவை பயன்பாட்டுக்கொள்கைகள், எவை புதிய கண்ணோட்டங்கள், அவதானிப்புகள்,, கருத்தரங்க விகசிப்புகள்,எவைஉள்ளீடற்ற பம்மாத்துகள் என அடையாளம் காணவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது


No comments:

Post a Comment