ஸ்கால்டனின் பார்வையில் தனிமங்களின் அணு எண்படியான பட்டியல் ஆய்வு
பழ.வெள்ளைச்சாமி
PERIODIC TABLE
ஒத்த வேதிப் பண்புகள் ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தொகுதிகளில் சேருகின்ற தனிமங்களின் அணு எண்படியான பட்டியல்.
முன்னுரை:
உலகத்துப் பொருட்கள் எல்லாம் தனிமங்களால் (elements) உண்டானவை. தனிமங்களின் கூட்டு தான் பல பொருள்களின் வரலாறு என்பதால், தனிமங்கள் அனைத்தையும் பற்றி அறிவது என்பது அனைத்துப் பொருட்களையும் பற்றி அறிவதற்குச் சமமாகும்.
மேலும், ஹோமியோபதியில் நோய்க்கு மருந்து கிடையாது. நோயுற்ற மனிதனுக்கே மருந்து என்று கூறப்படுகிறது. நோயுற்ற மனிதனுக்கு மருந்து கொடுக்க வேண்டுமென்றால், அவனை முதலில் தனித்துவப்படுத்த வேண்டும். பின்பு அவனுக்கு ஒத்த தனித்துவமுள்ள மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு துயரரையும் தனித்துவப்படுத்தி, அவருக்கு உரிய ஒரு மருந்தைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.
இதிலிருந்து ஒவ்வொரு தனி மனிதனையும் தனித்துவப்படுத்த வேண்டுமென்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மருந்தல்லவா தேர்வு செய்ய வேண்டும். கோடான கோடி மக்கள் வாழ்கின்ற பூமியில் தனித்துவப்படுத்துதல் என்று வந்தால் கோடான கோடி மருந்து அல்லவா தேவைப்படும். இது புதிர்தான். இது சாத்தியப்படுமா? ஏன்ற கேள்வி எழுகிறது.
ஆம். சாத்தியப்படும். ஏனெனில் கோடான கோடி மக்களும் கோடான கோடி பொருட்களும் 109(NOW 118 elements) தனிமங்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவை. எனவே இந்த 109 தனிமங்களைப் பற்றிய பண்புகள் அறியப்படும்போது நிச்சயமாக அனைத்து மனிதர்களுடைய தனித்தன்மைகளுக்கும் மருந்து தேர்வு செய்ய முடியும்.
ஹோமியோபதியில் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் மருந்துகளாகக் கருதப்படுகின்றன. அவை அனைத்தையும் நாம் நிரூபணம் செய்ய முடியுமா? அல்லது வீரியப்படுத்தத்தான் முடியுமா? ஆனால் இதை விட எளிமையானது அனைத்துப் பொருட்களுக்கும் ஆதாரமாக விளங்குகின்ற தனிமங்களை நிரூபணம் செய்வதும், அவைகளை மருந்துகளாகப் பயன்படுத்துவதும்தான்.
ஹோமியோபதியும், தனிமங்களின் அணு எண்படியான பட்டியலும்:
ஹோமியோபதியில் ஹானிமன் காலந்தொட்டு பல தனிமங்கள் தனியாகவும், கூட்டுக் பொருட்களாகவும் நிரூபணம் செய்யப்பட்டு மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களின் அணு எண்படியான பட்டியலின்படி அனைத்துத் தனிமங்களும் பயன்படுத்தப்படவில்லை.
முதன்முதலில் தனிமங்களின் அணுஎண்படியான பட்டியலின்படி மருந்துகளை ஆய்வு செய்யும் பணியை ஜெர்மி செர் மேற்கொண்டார். அவரைத் தொடந்து இராஜன் சங்கரன் அவர்களும் மற்றும் ஹாலந்து நாட்டுக்காரரான ஜான் ஸ்கால்டன் அவர்களும் தனிமங்களை ஆய்வு செய்து ஹோமியோ மருந்துகளாகப் பயன்படுத்தி அவைகளின் மருத்துவப் பண்புகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.
ஸ்கால்டனின் பார்வையில் தனிமங்களின் அணு எண்படியான பட்டியல்:
மொத்தத் தனிமங்களின் எண்ணிக்கை 109. இந்தத் தனிமங்கள் ஒத்த வேதிப்பண்புகளுள்ள ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தொகுதிகளில் சேருகின்ற தனிமங்களின் அணு எண்படியான பட்டியலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தனிமங்களின் அணு எண்படியான பட்டியல் படுக்கை (Horizontal) வரிசையில் ஏழு தொகுதிகளாகவும் (Series) செங்குத்து (Vertical) வரிசையில் 18 படிநிலைகளாகவும் (Stages) வடிவமைக்கப்பட்டுள்ளன.
டாக்டர். ஜான் ஸ்கால்டன் அவர்கள் இந்த ஏழு தொகுதிகளையும் மனித வாழ்க்கையின் தோற்றம் முதல் அந்திமம் வரையிலான ஏழு பருவங்களாகப் பார்க்கிறார். இந்த ஏழு தொகுதிகளுக்கும் தனித்தனியே ஒரு கருப்பொருள், பருவம், இடம், புலன் உணர்வு மற்றும் திசுக்கள் என்று வழங்கப்பட்டுள்ளன.
இது மிகச் சிறந்த உற்றறிதலின் வெளிப்பாடாகும்.
மனிதனின் எந்தக் கட்டத்திற்கும் ஒரு கருப்பொருள் இருக்கும். அந்தக் கருப்பொருளை நடைமுறைப்படுத்த ஒரு குறிப்பிட்ட வயது வேண்டும். ஒன்றை நடைமுறைப்படுத்த அதற்கான தகுந்த இடம் வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தும்போது ஒரு குறிப்பிட்ட புலன் உறுப்பு முக்கிய பங்கு வகிக்கும். அதேபோல அந்த மனிதனில் குறிப்பிட்ட திசுக்கள் பாதிக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்குமான தனித்தனி கருப் பொருள், பருவம், இடம், புலன் உணர்வு மற்றும் திசுக்கள் என்று பிரித்திருப்பது அவருடைய சமூகப் பார்வையும் உற்றறிதலையும் வெளிப்படுத்துகிறது.
இந்த ஏழு தொகுதிகள் ஒவ்வொன்றும் தோற்றம், வளர்ச்சி, உச்சகட்டம், வீழ்ச்சி, ஓய்வு என்ற வகையில் பதினெட்டு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஓவ்வொரு தொகுதிக்கும் (Series) ஒரு கருப்பொருள் (Theme) இருக்கிறது. அந்த ஒவ்வொரு தொகுதிக்குமான தனித்தனி கருப்பொருள்களுக்கும் பொதுவான பதினெட்டு படிநிலைகள் (Eighteen stages ) இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு படிநிலைக்கும் ஒரு தனி கருப்பொருள் இருக்கிறது.
.........................................................
முதல் தொகுதி ஹைட்ரஜன் தொகுதி. இது மனிதனின் தோற்றத்தைக் குறிக்கின்றது. இதில் ஹைட்ரஜன் முதல் ஹீலியம் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.
இரண்டாவது தொகுதி கார்பன் தொகுதி. இதன் கருப்பொருள் நான் என்பதன் வளர்ச்சியைக் குறிக்கின்றது. இதில் லித்தியம் முதல் நியான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.
மூன்றாவது தொகுதி சிலிகம் தொகுதி. இது உறவு முறைகளைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. இதில் நேட்ரம் முதல் ஆர்கான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.
நான்காவது தொகுதி பெர்ரம் தொகுதி. இது பணியை, வேலையைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. இதில் காலியம் முதல் கிரிப்டான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.
ஐந்தாவது தொகுதி அர்ஜென்டம் தொகுதி. இது படைப்பைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. இதில் ரூபியம் முதல் ஜெனான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.
ஆறாவது தொகுதி ஆரம் தொகுதி. இது அரசன் அல்லது தலைவர் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. இதில் காசியம் முதல் ரேடான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.
ஏழாவது தொகுதி யுரேனியம் தொகுதி. இது ஞானி அல்லது அறிஞர் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. இதில் ப்ரான்சியம் முதல் புளுட்டோனியம் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.
இவ்வாறு ஒவ்வொரு தொகுதியும், அந்தந்தத் தொகுதிக்கான பிரத்யோகப் பண்பை பெருவாரியாகக் கொண்டுள்ள தனிமங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.
மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் வருகின்ற தனிமங்களின் பண்புகள் பொதுப்படையாக ஒத்தத் தன்மையுள்ளவையாக இருக்கின்றன. அதனாலே ஒவ்வொரு தொகுதியிலும் ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்ட அந்தத் தொகுதியிலுள்ள தனிமத்தின் பண்புகளிலிருந்து நிரூபணம் செய்யப்படாத தனிமங்களின் பண்புகளை டாக்டர் ஸ்கால்டன் அவர்களால் யூகிக்க முடிந்தது.
ஓவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கருப்பொருள் இருந்தாலும், அனைத்துக்கும் பொதுவான தோற்றம், வளர்ச்சி, உச்சகட்டம், வீழ்ச்சி, ஓய்வு என 18 படிநிலைகள் கொண்டுள்ளது. ஓவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கருப்பொருள் இருந்தாலும், அனைத்துக்கும் பொதுவாகவே தோற்றம், வளர்ச்சி, உச்சக்கட்டம், வீழ்ச்சி, ஓய்வு என்பது இருக்கின்றபடியால், இந்த ஏழு தொகுதிகளுக்கும், தோற்றம், வளர்ச்சி, உச்சக்கட்டம், வீழ்ச்சி மற்றும் ஓய்வைக் குறிப்பதற்கு அனைத்துக்கும் பொதுவான 18 படிநிலைகள் இருக்கின்றன.
18 படிநிலைகளுக்கும் தனித்தனி கருப்பொருள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு படிநிலைக்கும் தனித்தனி கருப்பொருள் இருக்கின்றது. ஓவ்வொரு படிநிலையிலும் உள்ள கருப்பொருள் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவானதாகக் கருதப்படுகிறது.
முதல் படிநிலையின் கருபொருள் தோற்றம் : Begining
இரண்டாவது படிநிலையின் கருபொருள் இடத்தைக் காணுதல்:Finding a space
மூன்றாவது படிநிலையின் கருபொருள் ஒப்பிடுதல் : Comparing
நான்காவது படிநிலையின் கருபொருள் நிறுவுதல் : Establishing
ஐந்தாவது படிநிலையின் கருபொருள் தயாரித்தல் : Preparing
ஆறாவது படிநிலையின் கருபொருள் நிரூபித்தல் : Proving
ஏழாவது படிநிலையின் கருபொருள் பயிற்சி செய்தல் : Practising
எட்டாவது படிநிலையின் கருபொருள் விடா முயற்சி : Perseverance
ஓன்பதாவது படிநிலையின் கருபொருள் வெற்றி கிட்டும் தொலைவில் : Success in sight
பத்தாவது படிநிலையின் கருபொருள் மேதை : Lord and Master
பதினொன்றாவது படிநிலையின் கருபொருள் பேணுதல் : Preserving
பன்னிரெண்டாவது படிநிலையின் கருபொருள் பகுப்பு : Division
பதிமூன்றாவது படிநிலையின் கருபொருள் பின்வாங்குதல் : Withdrawal
பதிநான்காவது படிநிலையின் கருபொருள் சம்பிரதாயமானது : Formal
பதினைந்தாவது படிநிலையின் கருபொருள் இழப்பு : Loss
பதினாறாவது படிநிலையின் கருபொருள் ஞாபகப்படுத்துதல் : Remembering
பதினேழாவது படிநிலையின் கருபொருள் முடிவுக்கு விட்டுவிடுதல் : The end letting go
பதினெட்டாவது படிநிலையின் கருபொருள் ஓய்வு : Rest
இவ்வாறு பதினெட்டு படிநிலைகளுக்கும் தனித்தனி கருப்பொருள்கள் இருக்கின்றன. (அட்டவணையைப் பார்க்கவும்). ஓவ்வொரு படிநிலையிலுமுள்ள கருப்பொருள்களும் அதன் உட்பொருள்களும் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவானது.
.......
எந்த ஒரு தனிமத்தின் பண்பையும் அதன் தொகுதியின் கருப்பொருளையும் அதன் படியிலைக்கான கருப்பொருளையும் சேர்த்துப் பகுப்பாய்வு செய்யும்போது அறியலாம். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு படிநிலைக்கும் தனித்தனியே கருப்பொருள் இருந்தாலும்,
இந்தக் கருப்பொருள் ஒவ்வொன்றும் பிரதான சொற்களால் வரையறுக்கப்படுகின்றன. (அட்டவணை இணைப்பு).
அந்தச் சொல்லையொட்டி துயரரின் கூற்று இருக்கும்பட்சத்தில் அவர் இன்ன தொகுதியில் இன்ன படிநிலையில் இருக்கிறார் என்பதை யூகிக்க முடியும்.
உதாரணமாக ஒருவர் தன்படைப்பாற்றல் தொடர்பாக அறைகூவல் விடும் மனப்பான்மையுடன், தன் திறமையை நிரூபிக்கும் கட்டத்தில் இருப்பாரானால், அவர் ஆறாவது படிநிலையில் இருக்கிறார். படைப்பாற்றல் என்பது ஐந்தாவது தொகுதியான அர்ஜெண்டம் தொகுதியில் ஆறாவது படிநிலையில் உள்ள மாலிப்டினம் என்ற தனிமத்தில் இருக்கிறார் என்று அறிய முடியும்.
இவ்வாறு நாம் எளிதில் ஒரு தனிமத்தைப் பற்றிய கருப்பொருளை
அறியாமலேயே பிரதானச் சொற்களைக் கொண்டு நாம் எளிதில் துயரருக்கான மருந்தை அறிய முடியும். பெரும்பாலான துயரர்களிடம்இது சாத்தியமாகும். இருப்பினும் தனிமங்கள் ஒவ்வொன்றையும் பற்றி ஸ்கால்டன் விவரித்திருப்பது பிரதானச் சொற்களுக்கு அப்பாற்பட்டும் இருக்கின்றது என்கிறபடியால் தனிமங்களின் பண்பு விளக்க வரைபடத்தை சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நாம் துயரருக்கான சரியான மருந்தைத் தேர்வு செய்ய முடியும்.
இங்கே டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் எவ்வாறு ஒவ்வொரு தொகுதிக்குமான மற்றும் ஒவ்வொரு படிநிலைகளுக்குமான கருப்பொருளை நிர்ணயம் செய்தார். எதன் அடிப்படையில் தனிமங்களின் அட்டவணையை மனித வாழ்வோது ஒப்பீடு செய்தார்? என்பதற்கான விபரங்கள் கெடுக்கப்படவேயில்லை என்று கூட சொல்லலாம்.
ஸ்கால்டனின் ஆய்வு பற்றி:
ஓவ்வொரு தொகுதியிலும் ஒத்த வேதிப் பண்புகள் கொண்ட தனிமங்களை ஒழுங்காகத் திட்டவட்டமாக வரிசைப்படுத்தப்பட்டதிலிருந்து கருப்பொருளை ஊகித்திருக்கலாம்.
அணு எண் மற்றும் தனிமங்களின் வேதியல் மற்றும் பௌதீகப் பண்புகளை ஆய்வு செய்ததன் மூலம் ஒவ்வொரு தொகுதிக்குமான கருப்bhருளை நிர்ணயித்திருக்கலாம்.
ஓவ்வொரு தொகுதியிலும் ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்டு, பெறப்பட்ட சில தனிமங்களின் பணிபுகளைக் கொண்டு நிரூபணம் செய்யப்படாத தனிமங்களின் பண்புகளை அறிந்திருக்கலாம். இது சாத்தியமானதுதான். ஏனெனில் தனிமங்களைத் தொகுதிப்படுத்தும் போது ஒரு தொகுதியில் இடையில் விடுபட்ட தனிமத்தப் பற்றிய விபரத்தை, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அந்தத் தனிமத்திற்கு முன்னும், பின்னும் இருக்கின்ற தனிமங்களின் பண்புகளைக் கொண்டு அவ்விடுபட்டத் தனிமத்தின் பண்பை அறிய முடியும் என்பதை வேதியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இருந்தபோதிலும் டாக்டர்ஜான் ஸ்கால்டன்அவர்கள்தனிமங்களைப் பற்றிய விரிவுரை போதிய சான்றுகளின்றி இருக்கின்றன.
அவருடைய தனிமங்களைப் பற்றிய வரைபடம் ஊகங்களையே பிரதானமாகக் கொண்டுள்ளதாகக் கருதலாம். ஏனெனில் அவை நிரூபணம் செய்யப்படவில்லை.
பல தனிமங்களின் பண்புகள் நிரூபணம் செய்யப்படாமலேயே வரையப்பட்டிருந்தாலும், நிரூபணம் செய்யப்படவில்லை என்ற காரணத்தினால் மட்டுமே அவற்றை நிராகரிக்க முடியாது. ஏனெனில் அவர் விவரித்தபடி துயரர் வரும்போது, அவருக்கு அந்தத் தனிமத்தைக் கொடுக்கும் போது, அது அவரை நலமாக்குவதை நான் பல துயரர்களிடம் பார்ததிருக்கிறேன்.
பெரும்பாலும் நிரூபணம் செய்ய்பபட்ட ஹோமியோ மருந்துகள் நிரூபணம் செய்யும்போது அவை வெளிப்படுத்தும் குறிகள் அவைகளின் இயற்கைத் தனிக் குறியீட்டுப் பண்பை (Signature) ஒத்திருப்பதைக் காண்கிறோம். அதனால் இயற்கையில் உள்ள ஒரு பொருளின் தனிக் குறியீட்டுப் பண்புகளை உணரும்பட்சத்தில் அதனை வீரியப்படுத்தி அந்தப் பண்பையொத்த துயரருக்குக் கொடுக்கும்போது நிச்சயம் அது ஒத்தவை விதிப்படி குணப்படுத்தும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை.
அதனால் ஸ்கால்டன் தனிமங்களைப் பற்றி எழுதியது நிரூபணம் செய்து தொகுப்பட்டவையில்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட வேண்டியவையல்ல. பெரும்பாலான தனிமங்களும் அவற்றின் தொகுப்புப் பொருட்களும் சிறப்பாகவே வேலை செய்கின்றன.
டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் தனிமங்களின் அட்டவணைப்படி, மனித வாழ்க்கையை ஏழு தொகுதிகளாகப் பிரித்திருப்பது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது. சூதாற்றம், நான் என்ற வளர்ச்சி, உறவு தொழில், படைப்பு, தலைமை மற்றும் ஞானி என்று ஏழு பிரிவுககளாக மனிதனின் தோற்றம் முதல் இறுதி வரையிலான வாழ்க்கை முறையைப் பிரித்திருப்பது மிகவும் சரியாகப் பிரித்திருப்பதாகவே தெரிகிறது. இதை எவ்வாறு செய்தார் என்பதற்கான போதிய விளக்கம் கொடுக்கப்படவில்லை என்றாலும் மனித வாழ்க்கையை உற்றறியும் ஒருவருக்கு மனித வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை யூகித்து அறிவது சிரமமான காரியமன்று.
ஆனால் ஒவ்வொரு தொகுதியும் பதினெட்டு படிநிலைகளைக் கொண்டதாகவும், அவை முறையே தோற்றம், வளர்ச்சி, உச்சக்கட்டம், வீழ்ச்சி, ஓய்வு என்று கணிக்கப்பட்டிருக்கும் போது எப்படி ஒரு தொகுதி முடியும்போது அடுத்தத் தொகுதி தொடங்கும் என்பது புதிராக உள்ளது. இவ்வாறு ஸ்பிரிங் சுருள் போன்று ஒவ்வொரு தொகுதியும் அறாத் தொடர்ச்சியாக இருப்பதாக எண்ணுவது நகைப்புக்கு இடமாக உள்ளது. உதாரணமாக பணிக்கான தொகுதியான நான்காவது தொகுதியில் உள்ள ஒரு மனிதன் தொழில் செய்து படிப்படியாக உயர்ந்து, தாழ்ந்து பிறகு தரித்திரனாகி ஓய்ந்து போனவன் எப்படி (ஆர்சனிக்கம், செலினியம், புரோமியம்) படைப்பாற்றலோடு இருப்பான்? (ஒருவேளை பிச்சைஎடுப்பதற்காகப் பாடலாம்). அதேபோல படைப்புத் தொகுதியில் தாழ்ந்து, ஓய்ந்து போனவன் எப்படி தலைமைத் தொகுதிக்கு தொடக்கமாக இருக்க முடியும். இது ஒருபோதும் சாத்தியம் இல்லை. எனவே ஒவ்வொரு தொகுதிகளையும் ஸ்பைரலாக ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று இருப்பதாக குறிப்பிடுவது பொருத்தமற்றது. ஆனால பரிணாம வளர்ச்சியில் ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்துத் தொகுதிகளும் கூட நடந்தேறி விடும் என்று கருதலாம். ஆனால ஒரு மனிதனில் ஒரு தொகுதி முழுமையாக முடிந்தபின்பு தான் அடுத்தத் தொகுதி தொடங்கும் என்று கருதுவதுதான் சாத்தியமற்றது. பரிணாம வளர்ச்சியின் அறாத் தொடாச்சியை இந்த ஸ்பைரல் மூலம் ஸ்கால்டன் அவர்கள் விளக்க முற்படுகிறார் என்று கருதுவோமெனில் ஏற்புடையதாக இருக்கும். ஒரு மனிதன் ஒரு தொகுதியின் உச்சத்தில் இருக்கும்போதுதான் அடுத்த தொகுதிக்கு வரமுடியும் என்பது சரியாக இருக்கலாம்.
தொகுத்துப் பகுப்பாய்வு (Group Analysis) :
டாக்டர் ஸ்கால்டன் செய்ததில் மிகவும் சிறப்பானதும் மிகவும் பயனுள்ளதும் என்று கருதப்படுவது அவர் தனிமங்களைத் தொகுத்து பகுப்பாய்வு செய்வதும் அதன் மூலம் அந்தப் பொருளின் பண்பை வரையறுப்பதுமாகும்.
இந்தத் தனிமங்களைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்யும் பணியை டாக்டர் க்ளார்க் அவர்கள் மோரிகன் மற்றும் வித்தௌல்காஸ் போன்றவர்கள் செய்துள்ளார்கள். இதை டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் மிகவும் சிறப்பாகச் செய்துள்ளார்.
இவருடைய முதல் புத்தகமான ஹோமியோபதி மற்றும் மினரல்ஸ் (HOMOEOPATHY AND MINERALS)என்ற புத்தகத்தின் பெர்ரம் தொகுதிக்கு மட்டும் செய்துள்ளார். அவருடைய ஹோமியோபதி மற்றும் தனிமங்கள் (HOMOEOPATHY AND ELEMENTS) என்ற நூலில் மற்ற தொகுதிகளுக்கு இன்னும் விரிவாகச் செய்துள்ளார்.
பகுப்பாய்வு முறையில் ஸ்கால்டனை அறிந்து கொள்ள:
1.
தனிமங்களைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்வது மட்டுமின்றி, ஒரு தொகுதியின் கருப்பொருளையும், ஒரு படிநிலையின் கருப்பொருளையும் எடுத்து, இரண்டுக்குமான ஆதார வார்த்தைகளைத் தொகுத்து, ஒரு புதிய தனிமத்தின் பண்பையும் கருப்பொருளையும், கருப்பொருளுக்கான ஆதார வார்த்தைகளையும் உருவாக்கியுள்ளார்.
2.
ஒருவருக்கு நேட்ரம் தனிமத்தின் பண்பும், பாஸ்பரஸ் தனிமத்தின் பண்பும் இருக்கும்பட்சத்தில் அவருக்கு நேட்ரம் மற்றும் பாஸ்பரஸ் என்ற இரு தனிமங்களைக் கொடுப்பதற்குப் பதிலோக நேட்ரம் பாஸ் என்ற தாது உப்பைக் கொடுக்க முடியும்.
இங்கே நேட்ரத்தின் அடிப்படைக் கருப்பொருளும், பாஸ்பரஸின் அடிப்படைக் கருப்பொருளும் இணைந்து ஒரு புதிய கருப்பொருள் உருவாக்ப்படுகிறது. இதில் நேட்ரத்தின் சாயல் தனியாகவும், பாஸ்பரஸின் சாயல் தனியாகவும் இருப்பதற்குப் பதிலாக இரண்டும், இரண்டறக் கலந்த ஒரு புதிய சாயலாக அதற்கேயுண்டான கருப்பொருளாக வெளிப்படுகிறது.
3.
நேட்ரத்தின் சாரம் தனித்து (Alone) கார்பானிக்கத்தின் சாரம் மதிப்பு (Dignity). ஒரு மனிதர் தன்னைச் சார்ந்தவர்களுக்காக உழைத்து பாடுபட்டு எல்லோரையும் ஆளாக்கிய பின்பு இவர் யார் யாருக்காகப் பாடுபட்டாரோ அவர்களாலேயே அவருடைய மதிப்பு பாதிக்கப்படும் பட்சத்தில், தன் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளத் தனித்துப் போக வேண்டியதாயிற்று. இந்த நிலையில் தனித்து இருப்பதே மதிப்பானது என்ற மனநிலைக்கு நேட்ரம் கார்பானிக்கம்தான் மருந்தாக இருக்க முடியும்.
4.
தொகுப்பாய்வில் கார்பானிக்கம், நைட்ரஜன், புளோரின், சிலிகம், பாஸ்பரஸ், சல்பர், மூரியாடிகம், ஆர்சனிகம், புரோமியம், அயோடம், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், லாக்டிகம் மற்றும் அசிடிகம் ஆகிய தனிமங்கள் ஒவ்வொன்றுக்கும் உரித்தான கருப்பொருளும் பிரதான வார்த்தைகளையும் கொண்டுள்ளது. இந்தத் தனிமங்கள் அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள தனிமங்களோடு இணைந்து புதிய வேதிப் பொருட்களை உண்டாக்குகின்றன. அந்த வேதிப்பொருள் இரண்டு தனிமங்களின் சாரங்களையும் உள்ளடக்கி ஒரு புதிய சாரத்தோடு இருக்கின்றது.
இவ்வாறு இரு தனிமங்களைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் பல புதிய வேதிப் பொருள்கள் அதற்கே உண்டான தனித்தன்மையுடன் கூடிய சாரத்தோடு இருக்கின்றன.
5.
இரண்டு தனிமங்களின் அடிப்படை வார்த்தைகளை இணைப்பதன் மூலம் அந்த வேதிப் பொருளின் பண்பை அறிய முடியும் என்று பார்த்தோம். இது பல புதிய மருந்துகளைப் பகுப்பாய்வு செய்து அறிய உதவுகிறது.
அம்மோனியத்தின் அடிப்படை வார்த்தை வெறுப்பு. கார்பானிக்கத்தின் அடிப்படை வார்த்தை அப்பா. இப்போது அப்பா மீது வெறுப்புள்ள மனிதருக்கு அம்மோனியம் கார்பானிகம் மருந்தாகிறது. இதேபோல் அம்மா மீது வெறுப்பு என்பவருக்கு அம்மோனியம் மூரியாடிகம். சகோதரர்கள் மீது மற்றும் படிப்பு மீது வெறுப்புள்ளவருக்கு அம்மோனியம் பாஸ்பாரிகமும், உணவு மீது வெறுப்பு உள்ளவருக்கு அமோனியம் அயோடைடும், மகிழ்ச்சியாக இருப்பதில் வெறுப்பு உள்ளவருக்கு அம்மோனியம் நைட்ரிகமும், கணவர் மீது வெறுப்புள்ளவருக்கு அம்மோனியம் சல்ப்யூரிகமும் என்று நாம் எளிதில் மருந்து தேர்வு செய்து விடலாம்.
6.
ஒரு தனிமத்தின் அடிப்படை வார்த்தைகள் இன்னொரு தனிமத்தின் அடிப்படை வார்த்தைகளோடு இணையும்போது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல இரு வேறுபட்ட பண்புகளும் வெளிப்படலாம். அப்பா மீது வெறுப்பு என்ற கருவில் அப்பா என்ற கார்பானிகமும், வெறுப்பு என்ற அம்மோனியமும் இரண்டும் சேரும்போது மகனுக்கு அப்பா மீது உள்ள வெறுப்புக்கும், மகன் மீது அப்பாவுக்கு உள்ள வெறுப்புக்கும் என்ற இரு கருக்களுக்கும் அம்மோனியம் கார்பானிகம்தான் மருந்து என்பதை இந்தப் பகுப்பாய்வில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே போல் மெக்னீசியம்-கோபம் அடைதல். பாஸ்பாரிகம்-படிப்பு. இங்கே படிக்கச் சொல்வதால் கோபம் அடைதல் மற்றும் படிக்க விடாததால் கோபம் அடைதல் என்ற எதிர் எதிரான உணர்வு நிலைக்கும் மெக் பாஸ்தான் மருந்து.
இவ்வாறு பகுப்பாய்வில் தனிமங்களின் அடிப்படை வார்த்தைகளை எடுத்துக் கொண்டு உடன்பாடான மற்றும் எதிர்மறையான நிலைகளுக்கு மருந்து கொடுக்கலாம்.
பகுப்பாய்வு முறையும் மனித உறவுகளும் :
பகுப்பாய்வு முறையில் தனிமங்களை உறவு முறையோடு ஒப்பிட்டது மிகவும் சிறப்பானது. அது பல துயரர்களுக்கு எளிதாக மருந்து தேர்வு செய்ய உதவுகிறது.
அப்பா
-
கார்பானிக்கம், சிலிகா
அம்மா
-
மூரியாடிகம்
சகோதர சகோதரிகள், நன்பர்களுடன் தொடர்பு, படிப்பு, பயணம்
-
பாஸ்பரஸ்
மகிழ்ச்சி, பொழுதுபோக்கு
-
நைட்டிரிகம்
இமேஜ்
-
சிலிகா
கடமையை உணர்த்தும் அம்மா
-
காலி மூர்
அடித்து வளர்க்கும் அம்மா
-
பெர்ரம் மூர்
அம்மா மீது கோபம்
-
அம்மோனியம் மூர்
கோபப்பட்டால் அம்மாவைப் பிரிவோம் என்ற பயம்
-
மெக் மூர்
அதிகாரியாகவும், தாயாகவும் கடமை தவறாத அம்மா
-
ஆரம் மூர்
குழந்தைக்காக கலையை விட்டுக் கொடுத்த அம்மா
-
ஆண்டிமோனியம் மூர்
ஆச்சாரங்களையும், விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தும் அம்மா
-
குப்ரம் மூர்
பிள்ளைக்கு உதவுகிற அம்மா அல்லது அம்மாவுக்கு உதவுகிற பிள்ளை
-
மங்கானம் மூர்
கண்டிப்பான அம்மா அல்லது பாசம் கிடைக்காத மகன்
-
நேட்ரம் மூர்
உறுதியற்ற அம்மா
-
லித்தியம் மூர்
திறமையற்ற அம்மமா
-
பெர்லியம் மூர்
குறையை மறைக்கும் பகட்டான அம்மா
-
குரோமியம் மூர்
தான் படிக்காததை தன் குழந்தைகள் படித்து வாழ்க்கையில் சிறக்க வேண்டும் என்று நினைக்கிற அம்மா
-
ஜிங்கம் மூர்
வேலையையும், குழந்தைi வளர்ப்பையும் ஒரு சேரச் செய்ய முடியாத அம்மா அல்லது குழந்தைகள் பரீட்சையில் பெயிலானால் தான் பெயிலானதாக நினைக்கும் அம்மா
-
கோபால்டம் மூர்
குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அம்மா
-
ஸ்ட்ரோண்டியம் மூர்
தன்னுடைய படைப்பாற்றால் தன் குழந்தை வளர்ப்பால் பாதிக்கப்படும். குழந்தைகள் தன்னுடைய படைப்பாற்றலை உறிஞ்சியதாகவும், எனக்கு எதிரிகள் என் குழந்தைகள் தான் என்று எண்ணும் அம்மா.
-
காட்மியம் மூர்
அரசைத் துறந்த அம்மா
-
பிளம்பம் மூர்
அறிவு வளர்ச்சி குன்றி பரிகாசத்திற்குள்ளான அம்மா
-
பாரிடா மூர்
இவ்வாறு அம்மா-பிள்ளை, கணவன்-மனைவி, சகோரர்கள், நன்பர்கள் என்ற உறவு முறைகளில் ஏற்படும் முரண்பாடுகளுக்கு தனிமங்களின் பகுப்பாய்வின் மூலம் எளிதில் மருந்து தேர்வு செய்யலாம்.
இவ்வாறு ஸ்கால்டன் பார்த்திருப்பது, உறவு முறைகளால் மனநிலை பாதித்து அதன் விளைவாக நோயுறும் பல துயரர்களுக்கு எளிதில் மருந்து தேர்வு செய்ய உதவுகிறது.
இதற்காக நாம் குறுகிய வட்டத்திற்குள் சென்று விடக்கூடாது.
மூரியாடிகம் என்றால் அம்மா.
அம்மா என்றால் பேணுதலும், பராமரித்தலும் என்று கொள்ளலாம். இங்கே வயதான ஒருவரின் மனைவி இறந்த பின்பு அவருக்கு அவருடைய மனைவி தாய் போல் பராமரித்தார் என்ற பட்சத்தில் அவருக்கு நேட்ரம் மூரியாடிகம் கொடுக்கலாம்.
இதேபோல் தந்தையின் ஸ்தானத்தில் இருந்த அண்ணனை இழந்தவருக்கு நேட்ரம் கார்ப் கொடுக்கலாம். இங்கே உறவுகள் என்பதை விட உறவுகளைப் பிரதிபலிக்கிற உணர்வுகள்தான் முக்கியம்.
தனிமங்களைத் தொகுத்து பகுப்பாய்வு செய்யும் முறை பல வேதிப் பொருட்களின் பண்புகளை வரையறுக்கப் பயன்படுகிறது.
ஆனால், அவைகள் நிரூபணம் செய்யப்பட்டவைதானா? நிரூபணம் செய்யப்படாமல் இவ்வாறு பகுப்பாய்வு செய்து மருந்து கொடுப்பது எவ்வாறு சரியாகும் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இது ஹோமியோ தத்துவத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அதையும் மீறி அந்த மருந்துகள் ஒத்தவை தத்துவத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் போது சிறப்பாக வேலை செய்கின்றன.
.....
ஸ்கால்டன் முறையில் துயரர் ஆய்வு.
மற்றவர்களை விட டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் துயரரை ஆய்வு செய்வதை வித்தியாசமாக செய்கிறார்.
துயரரை ஆய்வு செய்வதன் நோக்கம் துயரருடைய பிரச்சனையைச் சிறப்பாக படம் பிடித்துப் பார்ப்பதுதான்.
அதாவது அவரைச் சரியாக ஆய்வு செய்து சரியான மருந்தைத் தேர்வு செய்வதுதான். நாம் இதை எவ்வாறு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் துயரரிடம் பல கேள்விகள் கேட்டு ஆய்வு செய்யலாம். துயரரை நுகர்ந்து பார்த்து ஆய்வு செய்யலாம். அவருடைய குரலைக் கேட்பதன் மூலம் ஆய்வு செய்யலாம். அவரைத் தொட்டுப்பார்த்து ஆய்வு செய்யலாம் அல்லது தூர திருஷ்டிப் பார்வையில் அறிந்து கொள்ளலாம். ஆக நாம் எப்படித் துயரரை ஆய்வு செய்தோம் என்பதை நாம் துயரருடைய வார்த்தைகளை அன்போடும், பரிவோடும் கேட்டோம் என்ற உணர்வு துயரருக்கு ஏற்பட்டதா என்பதை நிச்சயித்துக் கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நல்ல துயரர் ஆய்வு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லை. அந்தக் கணத்தில் உங்களுக்கு எப்படி ஆய்வு மேற்கொண்டால் துயரரை புரிந்து கொள்ள முடியுமோ அப்படி துயரர் ஆய்வைத் தொடங்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஓர் இழப்பு, ஓர் ஏமாற்றம் அல்லது ஓர் ஆசை இருக்கும். இவர் எந்தத் தன்மையில் இருக்கிறார் என்பதை அறிந்து அதனடிப்படையில் துயரர் ஆய்வை மேற்கொள்ளலாம்.
எல்லாவற்றையும் விட அவருக்கு துயர் ஏற்பட்ட காலம் எப்போது என்பதை அறிந்து அந்தக் காலக்கட்டத்தில் அந்தத் துயரர் எந்தச் சூழலில் இருந்தார் என்பதை அறிதல் என்பது மிகவும் அவசியமாகும். அந்தச் சூழலில் அந்தத் துயரரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அறிந்து அந்த மனநிலைக்குப் பொருத்தமான மருந்தைத் தேர்வு செய்யலாம்.
துயரர் ஆய்வின்போது அவருடைய பேச்சு எதை மையமாகக் கொண்டிருக்கிறது. அவர் அடிக்கடி உபயோகப்படுத்தும் சொல் எது என்பதை சரியாகக் கவனிக்க வேண்டும். அந்தச் சொல்லைக் கொண்டு அவர் எந்தத் தொகுதியில், எந்தப் படிநிலையில் இருக்கிறார் என்பதை யூகிக்க முடியும்.
எனவே, துயரர் ஆய்வில் கடந்த கால வரலாற்றை அறிவது என்பது முக்கியப் பங்களிக்கிறது. துயர் தொடங்கிய காலத்தில் துயரர் எந்தத் தொகுதியில், எந்தப் படிநிலையில் இருந்தார் என்பதை அறிய வேண்டும். மேலும், அப்போது அந்தச் சூழலுக்கேற்றாற்போல் அவருடைய மனநிலை எப்படி இருந்தது என்பதையும் அறிய வேண்டும் என்று டாக்டர் ஸ்கால்டன் வலியுறுத்துகிறார்.