ஹோமியோபதி - ஒரு புதிய பார்வை
PAZHA.VELLAICHAMYநெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜான்ஸ்கால்ட்டன் ஹோமியோபதிக்குச் செய்து வரும் பணி மிகச் சிறப்பானது.
அவர் தாம் எழுதிய இரண்டு புத்தகங்களிலும் (1 .HOMOEOPATHY AND MINERALS. 2.HOMOEOPATHY AND ELEMENTS). தனிமங்களின் அணு எண்படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மனிதனுடைய பல்வேறு நிலைகளை, கருவுற்றதிலிருந்து அவன் அந்திமக் காலம் வரை விவரித்துள்ளார். ஒவ்வொரு நிலையும் தனியானது போல் தோன்றினாலும் அது தனியானது அல்ல. அது அடுத்து வரும் நிலையால் மறுக்கப்பட்டு அது அறாத் தொடர்ச்சியாக ஏழு நிலைகளை மனித வாழ்வு எய்துவதைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
.
.
தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணு எண். அடிப்படையில் ஆய்வு செய்து கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. அதன் சிறப்பை மேலும் அறிந்து கொள்ள இன்னும் ஆழமாக தனிமங்களின் வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.
.
இவ்விரு புத்தக்கங்களையும் எழுதுவதற்கு தனிமங்களைப் பற்றியும், மனித வாழ்வைப் பற்றியும் மிகவும் ஆழமாகப் பரிசீலித்துள்ளார். ஆனால், அந்த ஆய்வு போதியளவு விளக்கப்படவில்லை. அதனால், அவர் ஆய்வு முறை பலருக்குக் குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இவ்விரு புத்தகங்களின் பயன் மிகச் சிறப்பாக உள்ளது.
ஹோமியோபதியில் நோய்க்கு மருந்தல்ல. மனிதனுக்குத்தான் மருந்து என்று கூறுகிறோம். அதனால், ஒவ்வொரு மனிதனிடத்திலும் குணப்படுத்த வேண்டியது எது என்பதையும், அதே போல், ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதையும் அறிய விழைகிறோம்.
மேற்கூறியபடிதான் டாக்டர் ஹானிமன் முதல் இன்று வரை தூய ஹோமியோபதியைச் செய்பவர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு மருந்தையும் ஒரு செயற்கை நோயாளராகப் பார்த்தார்கள். ஒவ்வொன்றின் தனித்துவத்தின் அடிப்படையில் அவைகள் வேறுபடுத்தி பார்க்கப்பட்டன.
.
ஆனால், ஸ்கால்ட்டன் அவர்கள் யாரும் இதுகாறும் பார்க்காத புதிய கோணத்தில் மருந்துகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு மனிதனாகப் பார்க்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனித் தன்மையானவன்தான் என்றாலும், அந்தத் தனித் தன்மை கூட திடீரென்று தோன்றிது இல்லை. அது மனித உறவுகளைச் சார்ந்தது என்பதையும் மனித உறவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளை பொருள்கள்தான் என்பதையும் மிகவும் சரியாக உள்வாங்கி எழுதியுள்ளார்.
அவர், அதனால் ஒவ்வொரு மனிதனையும் தனி மனிதனாக மட்டும் பார்க்காமல் குடும்பம், சமூகம் சார்ந்தவனாகப் பார்க்கிறார். எந்த ஒரு மனிதனும் தனியாக வாழ முடியாது என்பதையும், அவனுடைய வாழ்நிலை அவனால் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும், அது சமூக உறவுகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மிகச் சரியாகப் பரிசீலித்து இருக்கிறார்.
.
ஒரு மனிதனுடைய மனமானது ஒவ்வொரு மனிதனுக்கும் திடீரென்று வந்ததாகவோ அல்லது பிரபஞ்ச மனத்திலிருந்து வந்ததாகவோ கருதப்படுவதைப் புறக்கணிக்கும் வண்ணம், ஒவ்வொருவருடைய மனமும் அவனுக்குள் உள்ள அக முரண்பாடுகளின் விளைவாகவும், அவனுக்கும், பொருளியல், அரசியல் சார்ந்து குடும்ப, சமூக உறவுகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாகவும் தோன்றியது தான் என்பதை மிகச் சரியாகப் புரிந்துள்ளார்.
.
எனவே, ஒரு தனிமனிதனைப் புரிந்து கொள்ள அவனை மட்டும் புரிந்து கொண்டால் போதாது. அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மன நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
.
அவர்மருந்துகளை
அன்னையாக,
தந்தையாக,
பிள்ளைகளாக,
சகோதர - சகோதரிகளாக,
நன்பர்களாக,
தொழிலாளியாக,
கலைஞனாக,
அறிஞனாக,
தலைவனாக
மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்க்கிறார்.
ஏனெனில் மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்ந்துள்ளார்.
ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது. அவனுக்கும்- குடும்பத்திற்கும்,
அவனுக்கும்-சமுகத்திற்கும்,
அவனுக்கும்-தொழிலுக்கும்,
அவனுக்கும்-கலைப் படைப்புகளுக்கும்,
அவனுக்கும்-ஆளுமைக்கும்
உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ளார்.
.
அவர் ஓர் உண்மையைச் சொல்லுகிறார். ஒரு அலோபதி மருத்துவருக்கு நோய்க் கூறு இயலையும், நுண்ணுயிரி இயலையு எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டுமோ அதைவிட ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்ததையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும். சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை இவர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.
.
இவர் இவ்வாறு மருந்துகளைப் பார்ப்பதற்கு ஆதாரங்களை எவ்வாறு திரட்டினார் என்பதற்கு போதிய விளக்கங்கள் இல்லை. பல சமயம் புதிராக இருக்கிறது. இருந்தாலும், அவர் கூறியபடி மருந்துகள் பயன்படுத்தப்டும்போது அவைகள் மிகவும் சிறப்பாக குணமளிக்கின்றன.
ஒரு மனிதனுக்கு நோய் தோன்றிய காலத்தில் அவனுக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உள்ள முரண்பாடு என்ன என்பதை அறிந்து, அந்த முரண்பாட்டின் விளைவாகத் தோன்றிய நிலைப்பாட்டுக்கு (state) தகுந்த மருந்தைத் தேர்வு செய்தால், அந்த மருந்து அவனுக்கு உரிய மருந்தாகிறது. அவனை நலப்படுத்துகிறது.
.
ஜான் ஸ்கால்ட்டனைப் பின்பற்றும்போது குறிகளுக்குக் (symptoms) கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.
மருந்துகாண் ஏட்டைப் பயன்படுத்தத் தேவையில்லை.
ஒட்டு மொத்தக் குறிகளைக் காண வேண்டிய அவசியமில்லை.
மியாசம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. துயரரை அறிவது எளிமையாக்கப்படுகிறது.
.
ஆக, ஜான் ஸ்கால்ட்டன் ஹோமியோபதித் துறையின் புதிய சகாப்தம். அவருடைய ஆய்வு முறையை மேலும் செழுமைப்படுத்தும்போது ஹோமியோபதி மேலும் சிறப்படையும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.