Monday 6 March 2017

ஹோமியோபதி மருத்துவம் ஓர் அறிமுகம் மற்றும் அதன் அறிவியல் பின்புலம், தயாரிப்புமுறை,என்னென்ன மருந்துகள் மற்றும் இந்தியாவில் அதன் நிலை மற்றும் சிறப்பு

மேஜர் தி.சா.இராஜூ



ஹோமியோபதி என்றால் என்ன?
இப்படி ஒரு கேள்வி கேட்பவரின் உதட்டோரத்தில் தோன்றும் ஏளனப் புன்னகையைச் சக மருத்துவர்கள் பொருட்படுத்தக் கூடாது. குறைபாடு நமது மருத்துவர்களிடமே உள்ளது. மருத்துவர்களுக்கு மூல நூலைப் பற்றிய அறிவு குறைவு. அவர்களுடைய இன்றைய அணுகுமுறையும் பெருமை சேர்ப்பதாக இல்லை.
'

பலமுறைகள்

ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி முறை, அக்யூபஞ்சர் என்ற சீன வைத்தியம், அல்லோபதி என்ற ஆங்கில மருத்துவம் அனைத்துமே உயிர்க்குலத்தின் துயர்துடைக்கவே ஏற்பட்டவை. எதிலுமே ஏமாற்று இல்லை.
.

தனிமுறை

ஆனால் ஹோமியோபதி மருத்துவம் மற்றவைகளிலிருந்து மாறுபட்டது. அதை உணர்ந்து கொண்டால் மட்டுமே, மற்ற துறைகளை இத்துடன் குழப்புவது தவறு என்பது புரியும். இதை அறிமுகப்படுத்தியவர் ஃப்ரெடரிக் கிறிஸ்டியன் ஸாமுவேல் ஹானிமான். இவர் ஜெர்மனி நாட்டில் உள்ள மீஸன் நகரத்தில் பிறந்தவர். அல்லோபதி மருத்துவத்தில முதுகலைப் பட்டம் பெற்றவர். ஒரு பன்மொழிப் புலவர். பிற மேதைகளின் நூற்களைத் தமது மொழியில் பெயர்ப்பதையே வாழ்முறையாகக் கொண்டிருந்தவர்.
இரண்டு கருத்துக்களை இவர் ஆராய்ச்சி மூலம் தெளிந்தவர். முதலாவது, ஒரு பொருளை அதிக அளவில் உட்கொள்வதனால், ஏற்படும் துயரங்களை வீரியப்படுத்தப்பட்ட அதே பொருள் நீக்கிவிடும். அடுத்தது ஒரு பொருளை நீர்ப்பதனாலும், கடைவதனாலும், அதன் மருத்துவ வீரியம் அதிகமாகிறது. இந்த இரண்டு அடிப்படைக் கருத்துகளுமே ஆயுர்வேதத்தில் உள்ளவை. (நஞ்சேதான் நஞ்சுக்கு மருந்து). மர்த்தனம் குண வர்த்தனம்). ஆயுர்வேத மருத்துவர்கள் தொடர்ந்து இத்துறையில் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதே உண்மை.

.
நஞ்சும் மருந்தும்

ஹானிமன் வசித்த இல்லத்தைச் சுற்றி ஏராளமான சிங்கோனா மரங்கள் இருந்தன. அவரும் அவருடைய குடும்பத்தாரும் நோய்வாய்ப்பட்டனர். அந்த மரப்பட்டையைப் பொடித்துக் கிழாயமாக்கி நீர்த்துக் கொடுத்ததில அவர்களுடைய சுகவீனம் மறைந்து போயிற்று.
.
வீரியப்படுத்துதல் என்பது அதை நீர்ப்பதும், கடைவதுமாகும். இதை அவருடைய சமகாலத்து மருத்துவர்களே ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இந்தக் கொள்கைகளை மெய்ப்பிக்க அவர் பெரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
.

ஏற்பு

இந்தக் கொள்கைகளை ஏற்காத சகமருத்துவர்கள் அவரை மீஸன் நகரை விட்டே விரட்டிவிட்டனர். ஹானிமன் ஃப்ரான்ஸ் நாட்டில் குடியேறி அதன் தலைநகரிலேயே இந்தப் பணியைத் துவங்கினார். அந்த நாட்டின் மருத்துவ நிபுணர்கள் அவரது பெருமையை உணர்ந்தனர். அவர் பெரும் புகழும், செல்வமும் ஈட்டினர். இன்ற அந்த நாட்டில் முப்பத்தேழு விழுக்காடு மக்கள் இந்த முறை மருத்துவத்தின் மூலம் பயனடைகிறார்கள்.
.

ஆதிவேதம்

தமது முறையை விளக்க அவர் ஆர்கனான் என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு இவர் ஆறு பதிப்புகள் கொண்டு வந்தார். முன் கூறிய கருத்துகளில் குறைபாடு இருந்தால் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார். இந்த நூல்தான் ஹோமியோபதி மருத்துவத்தின் ஆதிவேதம். இதைத் தவிரவும் அவர் பல நூல்கள் எழுதி வழங்கினார். எண்பத்து எட்டாம் வயதில் இயற்கை எய்தினார்.
.

உடலே ஆய்வுக்களம்

இவருடைய முறையின் சிறப்பு ஒவ்வொரு மருந்தைiயும் அவர் தாமே உட்கொண்டு மெய்ப்பித்து எழுதியதுதான். இருநூறு மருந்துகளை அவர் இந்த வகையில் மெய்ப்பித்து வரைந்திருக்கிறார்.
.
இவரைப் பின்தொடர்ந்து பல மருத்துவ மேதைகள் இந்த முறையைப் பின்பற்றினார்கள். தங்களது அனுபவங்களை எழுதி வைத்தனர். இவர்களின் முக்கியமானவர்கள் லிப்பே, ஜேம்ஸ்டெய்லர் கெண்ட், ஆலன், ஹெரிங், நாஷ், போய்னிங் ஹாஸன், ஃபாரிங்டன் ஆகியோர். எல்லாப் பெயர்களையும் இங்கு குறிப்பிடவில்லை. விரிவஞ்சி விடுகிறேன். இவர்கள் அனைவருமே அலோபதி மருத்துவ நிபுணர்கள்.அந்த மருத்துவ முறையை விட இது மேலானது என்பதைத் கண்டுணர்ந்தார்கள். தமது அனுபவங்களை உலகிற்கு எடுத்துரைத்துப் பெருந்தொண்டு புரிந்தவர்கள்.
.

சிறப்பு

இந்த முறையின் இரண்டு சிறப்புகளை எடுத்துக் கூறுவது பொறுத்தமாக இருக்கும். ஒன்று, இந்த மருந்துகள் பக்க விளைவுகளை உண்டாக்காது. அடுத்து இதை விட மலிவான மருத்துவம் உலகிலேயே கிடையாது. ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும், சிறந்த முறைகள் ஐயமில்லை. ஆனால், இந்த மருந்துகளின் விலை எளிய மக்கள் அணுக முடியாமல் உள்ளது.
ஒரு காலத்தில் அற்புதம் விளைவிப்பவை என்று கருதப்பட்ட பல அலோபதி மருந்துகளை அந்த மருத்துவர்களே இன்று பயன்படுத்த அஞ்சுகின்றனர்.
.

மருந்து மூலம்

இந்த மருந்துகளின் மூலப் பொருட்கள் யாவை? அது ஒரு முக்கியமான தகவல்.
.

தாவரம்

முசுமுசுக்கை, வல்லாரை, நாகதாளி, கீழாநெல்லி, எட்டிக்காய், வேம்பு, காற்றுமலர், வெள்ளரிக்காய், கற்றாழை, எருக்கு ஆகியவை சில.
.

கனிமம்

பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, பாதரசம், பாஸ்வரம், கோந்துகள், கந்தகம், சமையல் உப்பு, சுண்ணாம்பு முதலியவை.
.

விலங்கு

பலவகைப் பாம்பு, சுள்ளெறும்பு, சிலந்தி, நாய்ப்பால், கரப்பான்பூச்சி ஆகியன.
.

நோய்க் கழிவுப் பொருள்

சீழ், சிறங்குப் பொறுக்கு, வெட்டை ஒழுக்கு. நெஞ்சுச் சளி, நோயுள்ள நுரையீரல் இவை சில எடுத்துக்காட்டுகள்.
.

தயாரிப்பு முறை

இந்த மூலப் பெருள்களைக் கடைந்து, பொடித்து, உறைத்து இவற்றின் ஆதித்திரவத்தை (இதைத் தாய்த் திரவம் என்று அழைப்பார்கள்) பிறகு சுத்தமான உண்சாராயத்துடன் கலந்து வைப்பார்கள். இவற்றை ஏற்ற முறையில் வீரியப்படுத்துவார்கள். இவை முறையே மூன்று, ஆறு, பன்னிரண்டு, முப்பது, இருநூறு ஆகிய வீரியங்களில் தயாரிக்கப் பெறும். இந்தத் திரவத்தில் பால்சீனி உருண்டைகளை முக்கி எடுத்துப் பின் பாட்டிலில் அடைத்து வைப்பர். சீராகப் பாதுகாக்கப்பட்டால் இவை பல ஆண்டுகளுக்குக் கெடாமல் இருக்கும். இந்த முறையில் எல்லா மருந்துகளும், ஒரே மாதிரி இருக்கும், மாத்திரைகளில் பல அளவுகள் உள்ளன. முப்பதாவது அளவில் உள்ள இரு மாத்திரைகள் மட்டுமே ஒருவேளை மருந்தாக அமையும்.
.

இடம்-வலம்

இந்த முறையின் மற்றொரு தன்மை, இவை சிறப்பாக உடலின் வலது, இடது புறங்களில் தீவிரமாகவேலை செய்யும். எடுத்துக்காட்டாக எட்டிக்காய் வலதுபக்க மருந்து. கந்தகமும், பாதரசமும் வலது பக்க நிவாரணிகள். மெக்னீஷியம், தூஜா லாக்கஸிஸ் ஆகியவை இடது பக்கத்தில் சிறப்பாகப் பணிபுரியும். மற்றப் பகுதிகளில் பலன் இராது என்பதன்று. அன்றியும் எந்தப் பக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தால் மருந்தைத் தேர்ந்தெடுப்பது எளிது.
.
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகியவற்றிலும், அலோபதி முறையிலும் இல்லாத சிறப்புத் தன்மை, இந்த இடம் வலம் என்பதாகும். இது குறித்துப் பல நிபுணர்களிடம் விவரம் கேட்டேன்.அவர்கள் கூறிய விளக்கம் நினைவில் வைக்கத்தக்கது.
.
எலி, தவளை, குரங்கு ஆகிய விலங்குகளுக்கு, மருந்துகளைக் கொடுத்து அதன் விளைவைக் கண்டறிவது மற்ற மருத்துவ முறைகள். ஆனால் ஹோமியோபதி முறையில் மட்டும்தான் ஆரோக்கிய நிலையிலுள்ள ஆண், பெண் ஆகியோருக்கு இந்த மருந்துப் பொருட்களைக் கொடுத்து, அதன் விளைவுகளைக் கேட்டறிந்திருக்கிறார்கள். விலங்குகளால் இதைத் தெரிவிக்க இயலாதே.
.
இந்த மருத்துவத்தின் மிகப் பெரும் சிறப்பு இது.
இன்னும் பலருக்கு முதியோருக்கு, பூப்படையும் நிலையிலுள்ள பெண்களுக்கு என்று பல மருந்துகள் உள. பேறுகாலத்திற்குப் பின்பு உதிர விரையத்தின் விளைவு, உடலின் நீர்ச்சத்தின் செயல்பாடு, ஆகியவைகளுக்குமான அற்புதமான நிவாரணம் இந்த முறையில உள்ளன.
.
இதன் இன்னொரு சிறப்புப் பணிபுரியும் கால அளவு, சில மூன்று நாட்கள், ஏழு நாட்கள், முப்பது, அறுபது நாட்கள் வரை செயல்படும்.
.

நேரம்

ஒரு நோயாளியின் துயரம் எந்த நேரத்தில் அதிகமாகிறது. அல்லது தணிகிறது. என்பதும் ஒரு சிறப்பான குறி. காலை ஒன்பது மணிக்கு நோய் மிகுந்தால் அதற்கு மருந்து சமையல் உப்பு, நன்பகல் நள்ளிரவு ஆகியவற்றிற்கு தெள்ளுபாஷாணம் (ஆர்ஸனிக்கம்) மாலை நான்கு மணிக்கு என்றால் லைக்கோபோடியம், இதற்கான தனி அட்டவணை ஒன்றே தயாரிக்கப்பட்டுள்ளது. நோய் இரவு நேரத்தில் மிகுமானால், அப்போது கந்தகத்தையும், பாதரசத்தையும் குறித்து எண்ண வேண்டும்.
.
ஒவ்வொரு மருந்திற்கும் தொடர் மருந்தும், எதிரி மருந்தும் உள. மருத்துவர் ஜே.ஹெச்.கிளார்க், கிப்ஸன், மில்லர் ஆகியோர் இதன் பொருட்டுத் தனி நூல்களே எழுதியிருக்கிறார்கள். அதைப் படித்து அறிந்து கொள்வது மருத்துவரின் கடமை.
.

தவிர்க்க வேண்டியவை

ஹோமியோபதி மருந்துகள் உண்ணும்போது காபி, தேயிலை, புகையிலை ஆகியவற்றை விலக்க வேண்டும். இந்த மூன்றிலும் ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. எனது ஆசான் இவைகளைத் தவிர்ப்பவர்களுக்கு மட்டுமே மருந்து தருவார். நானும் அவர் வழியையே பின்பற்றுகிறேன்.
.

யார்-எவர்? 

இந்திய நாட்டில் கொடி கட்டிப் பறந்த ஹோமியோபதி மருத்துவர்கள் அனைவருமே அல்லோபதி மருத்துவர்கள். அவர்களில் சரோஜினி தேவியின் மகன் ஜெயசூர்யா மேற்படிப்பிற்காக, ஜெர்மனி சென்றார். அங்கு ஹோமியோபதி பட்டம் பெற்று வந்தார். ஹைதராபாத்தில் அவர் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். இன்று அவருடைய பெயரில் ஒரு மருத்துவக் கல்லூரியே இயங்குகிறது.
திருச்சி மைய மருத்துவமனையின் தலைவராக இருந்த உமாபதி முதலியார் ஹோமியோபதி மருத்துவம் பார்த்ததற்காக. பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னால் அவரை அழைத்துக் கௌரவித்தார்கள்.
மும்பையிலிருந்து செயல்பட்ட பாபுராவ் படேலை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். இவர் சிறந்த இலக்கியவாதியும்கூட. ஹோமியோபதித் துறையில் பெரும் புகழும் செல்வமும் ஈட்டினார்.
திருவிடைமருதூர் ராமமூர்த்தி இந்தத் துறையில் சிறப்பாகப் பணியாற்றினார். மருந்துகள் தயாரித்ததுடன், பல மருத்துவர்களையும் உருவாக்கினார். கடினமான உழைப்பாளி, நல்ல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
.

கோள்நிலை

சூரிய, சந்திரர்களின் போக்கு மனிதர்களைப் பாதிக்கும் என்ற தத்துவத்தையும், இந்த மருத்துவமுறை ஏற்றுக் கொள்கிறது. உடலின் எந்தப் பகுதியில் கட்டிகள் தோன்றினாலும் அவற்றை நீக்க தேய்பிறையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகியவையும் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
.
எங்கள் ஆசானைப் பற்றிக் குறிப்பிடாமல் இது முழுமை பெறாது. அவர் ஹைதராபாத் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர். அந்த மன்னரிடம் பொற் பட்டயம் பெற்றவர். ஆழ்ந்த புலமையும், நினைவாற்ற்லும் மிக்கவர். மருத்துவப் புத்தகத்தின் பக்கம் வரி ஆகியவைகளைக்கூட அவர் நினைவில் பதிய வைத்திருந்தார். பெயர் திரு. சேஷாச்சாரி.
நோயாளியின் குறிப்பைத் தயாரித்து முடித்ததும் எதற்கும் ஐயர் என்ன சொல்லுகிறார் என்று பார்த்துவிடு என்று பரிவுரை செய்வார். மாயூரத்தைச் சேர்ந்த திரு. டி .சுப்ரமணிய ஐயர் மைய அரசின் கணக்காய்வுப் பிரிவின் உயர் பதவி வகித்தவர். புகழ் பெற்ற விஞ்ஞானி ஸர்.சி.வி.இராமன் இவரிடம் மருத்துவ உதவி வேண்டி வருவார். இவர் எழுதியது ஒரே நூல்தான். ஆனால் அது ஹோமியோபதி மருத்துவத்தின் சாரம் முழுவதையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்த நூலுக்குக் கர்னல் ரமணராவ் என்ற மருத்துவப் படைவீரர் முன்னுரை அளித்துக் புகழாரம் சூட்டியுள்ளார்.
.

சிறப்பு அதிகாரம்

இறுதியாகச் சில சொற்கள். நமது வள்ளுவம் எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கியது. இதில் இல்லாத எப்பொருளும் இல்லை. நாயனார், மருந்து என்ற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்கள் வரைந்துள்ளார். அடிப்படை ஆயுர்வேதம்தான் என்றாலும் இவற்றை எல்லா மருத்துவர்களும் படித்துக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும். இந்தப் பாக்களை நமது மருத்துவமனையின் சுவர்களில் எல்லாம் பெரிய எழுத்தில் வரைந்து வைக்க வேண்டும் இவற்றைப் படிகிகும்போது, ஒரு தமிழன் இப்படி எல்லாத் துறைகளிலும் ஒப்புயர்வற்றுப் பணிபுரிந்தானே என்று நாமெல்லாம் பெருமைப்படலாம்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு
.
‘நோய் நாடி, அதன் முதல் நாடி, அது தணிக்கும்`
வாய் வாடி வாய்ப்பச் செயல்’
.
இதுதான் ஹோமியோபதி.அதனால் தான் மற்ற முறை மருத்துவர்களைப் போல் சகட்டுமேனிக்கு மருந்தை அளிக்காமல், நோயாளிகளை ஆராய்ந்து ஹோமியோபதி மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். சரகர், ஸுஸ்ருதர், ஜீவகன் ஆகிய பெரியோர்களும் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள்.
தற்போது இந்த அறிமுகம்போதுமே
ஒரு மருந்தை அதிக அளவில் உட்கொண்டு, அதன் விளைவால், மனித உடலில் என்ன மாறுதல் நிகழ்கிறது என்று ஆராய்வது ‘மெய்ப்பித்தல்’ ( PROVING) எனப்படும்.
இதை முதன் முதலில் சாதித்தவர் சாமுவேல் ஹானிமன் (1755-1803) இரு நூற்றுக்கும் அதிகமான பொருள்களைத் தாமே உட்கொண்டு, அதன் விளைவு குறித்து எழுதி வைத்தவர் இந்த மேதை. அந்த விளைவுகளை அதே மருந்தின் மிகக் குறைந்த அளவு போக்கிவிடும் என்ற தத்துவம் தான் ஹோமியோபதி.
.
‘எயிட்ஸ்’ என்பதே ஒரு மாயை. அப்படி ஒரு சுகவீனம் இருப்பதாகப் பறையறிவிப்பது மனித குலத்திற்குச் செய்யும் மிகப் பெரிய தீங்கு என்பதே ஹோமியோபதி நிபுணர்களின் முடிவு.
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ளத்யேந்தல் என்ற சிற்றூரில் டாக்டர் ஆண்டிரியாஸ் ஒவ்வொரு நாளும் 264 நோயாளிகளுக்கு மருந்தளிக்கிறார். அங்கு கூட்டம் அலை புரளுகிறது. அவர் ஜெர்மனியிலிருந்து இந்தியாவிற்கு வந்து தொண்டு புரியும் அருமனிதர். எயிட்ஸ் நோயாளிகள் எவராவது உங்களிடம் வந்தால் அவரை என்னிடம் அனுப்பி வைக்கலாம். அவர் சீராகி விடுவார் என்று அறைகூவல் விடுத்தேன். (காண்க ‘ஹெல்த்’ பிப்ரவரி 1996 இதழ்) அவரும் ஏற்றுக் கொண்டார்.
இப்போது வரத்தொடங்கியுள்ளார்கள்.
'
'
***
ஹோமியோபதி அற்புதங்கள்
புத்தகத்திலிருந்து
***********
மேஜர் தி.சா.இராஜூவின் அற்புதங்கள் தொடரும்............

ஹோமியோபதி அற்புதங்கள் மேஜர் தி.சா.இராஜூ



"ஹோமியோபதி என்றால் என்ன? "
இப்படி ஒரு கேள்வி கூடவே ஒரு ஏளனமான புன்சிரிப்பு. இப்படிக் கேட்பவர் கல்வி பெற்றவர் சமுதாய நடைமுறைகளை அறிந்தவர்.
'
எவரும் யுனானி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், அலோபதி ஆகிய முறைகளைப் பற்றி இவ்வாறு கேட்பதில்லை. ஏனென்றால், அந்த முறையாளர்கள் சீறுவார்கள். ஊருக்கு இளைத்தவர் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று ஒரு பழமொழி உண்டு. இன்று ஏளனத்துக்கு இலக்காகிறவர் ஹோமியோபதி மருத்துவர் மட்டுமே.
'
"உங்களுடைய படி வருமானம் என்ன?"
ஹோமியோபதி மருத்துவர் தம்மிடம் சிகிச்சை பெற வந்துள்ளவரிடம் இவ்வாறு கேட்கிறார். இது நோய்க்கு தொடர்பில்லாத கேள்வி என்ற பொருளில் கேலி செய்றது கல்கியில் வெளிவந்தள்ள கட்டுரை.
'
நோயாளியின் பொருளாதார நிலை என்ன? அவருக்கு அந்தத் துறையில் சிக்கல்கள் உள்ளனவா? அதனால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறதா? அதன் விளைவாக நோய் தோன்றி இருக்கிறதா என்று மருத்துவர் அறிய விரும்புகிறார். பொருளிழப்பினால் மனநிலை பாதிக்கப்பட்டு அதன் காரணமாக நோய் தோன்றக்கூடும். அதற்கு மருந்து ஹோமியோபதித் துறையில் உண்டு என்ற உண்மை மரமண்டைகளுக்குத் தெரியாதுதான். (நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?)
'
இதுவரை ஹோமியோபதி மருத்துவமுறை பற்றி ஐந்து புத்தகங்கள் எழுதிவிட்டேன். அவற்றில் சில மறுமுறையும் பதிக்கப்படுகின்றன. இவற்றை எழுதுவதற்காகத்தான் பல துறை மருத்துவ நூல்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால இவ்வளவையும் படித்த பிறகு வள்ளுவரை ஒத்த ஒரு மருத்துவ மேதையை என்னால் காண முடியவில்லை. பொருட்பாலில் மருந்து என்ற அடிகளில் உள்ள பத்து குறட்பாக்களுள் அற்புதமான பொருட்பாடல்கள்.
'
நோய் நாடி அதன் முதல் நாடி - அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்.
என்றொரு அமுதவாக்கு. 
'
உண்மையாய் தொழில் புரியும் ஹோமியோபதி மருத்துவர் ஒரு நாளைக்கு இருபது நோயாளிகளுக்கு அதிகமாகச் சிகிச்சை அளிக்க இயலாது. 
அதற்குக் காரணம் ஒவ்வொரு நோயாளியும் ஒரு தனி குணச்சித்திரம். ஒரே வீட்டில் மூன்று குழந்தைகள். அவற்றின் நோய்க்குறிகள் ஒரே வகையானவை. ஆனால் மூவருக்கும் வெவ்வேறு மருந்துகள் தர வேண்டியிருந்தது என்று எழுதுகிறார் மருத்துவமேதை நாஷ். சகட்டுமேனிக்கு மருந்து என்ற செய்தியே இந்த மருத்துவ முறையில் கிடையாது.
'
ஆர்னிகா மாண்டென்னா என்ற ஒர் அற்புதமான மருந்து மேதை ஹானிமனால் மெய்ப்பிக்கப்பட்டது. அது பல முறை நிவாரணி. அந்த மருந்து முடிவளர்வதற்கு உதவும் என்று அவர் எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் மட்டுமன்று அவருக்குப் பின் வந்த நிபுணர்கள் எவரும் இவ்வாறு கூறவில்லை. ஆனால் நடைமுறை வாழ்வில் என்ன நிகழ்கிறது? பல மருத்துவ நிறுவனங்கள் ஆர்னிகேட்டட் கூந்தல் தைலத்தைக் குறித்து விளம்பரம் செய்கினிறன. விற்பனையும் செய்கிறார்கள்.
எனது இரண்டாவது நூலை குடந்தையிலுள்ள ஒரு மருத்துவ நிறுவனம் வெளியிட்டது. அதில் ஆர்னிகாவைப் பற்றி விளக்கும்போது எல்லாத் துறையிலும் நடக்கும் மோசடிகள் ஹோமியோபதியிலும் புகுந்துவிட்டன. அதற்கு இந்த ஆர்னிகா தைலம் எடுத்துக்காட்டு என்று எழுதியுள்ளேன்.
புத்தகம் வெளியான பிறகு நிறுவன மேலாளர் என்னைக் கேட்டார். ‘நாங்களே இந்த முறையில் விற்பனை செய்கிறோம்.. நீங்கள் இப்படி எழுதிவிட்டீர்களே..’
'
என்னுடைய மறுமொழி
‘நான் உண்மையைக் கூற என்றும் தயங்குவதில்லை’ ஆனால் உண்மை யாருக்கு வேண்டும்?
பல கனிமங்களைக் குறிப்பிட்ட அளவில் கலந்து மேதைகள் மெய்ப்பித்திருக்கிறார்கள். அவைகளைக் குறியினுக்கேற்பத் தருவது நேர்மையான மருத்துவம். 
ஆனால் இன்று நடப்பது என்ன?
ஒவ்வொரு வகை நோய்க்கும் ஒரு கூட்டு மருந்து. இது மெய்ப்பிக்கப்பட்டதா? சத்தியமாக ஆதாரம் இல்லை. 
அந்த நாளில் ஒரு திரைப்பட பாடல் உண்டு.
'
தலைவலிக்கொரு மாத்திரை தடுமனுக்கொரு மாத்திரை, சாப்பாட்டுக்கு முன்னாலே, சாப்பாட்டுக்கு பின்னாலே..
'
இது அலோபதி மருந்துகளை ஏளனம் செய்த புகழ்பெற்ற பாடல். அந்த நிலைக்குத் நாமும் தள்ளப்பட்டுவிட்டோமே? இது நியாயமா? தருமந்தானா?
'
என்னிடம் ஒர் இஸ்லாமிய அன்பர் வந்தார்.
‘என் மனைவிக்கு நெடுநாளாக இருமல், சளி, இழுப்பு அதற்கு மருந்து வேண்டும்’
'
நோயாளியை ஒரு முறை நேரில் பார்த்து விவரங்களைப் பதிவு செய்தபிறகே என்னால் உதவ முடியும் - எனது மறுமொழி.
'
மறுநாள் தமது மனைவியுடன் வருகிறார். அந்த மங்கையை உடல்நிலை குறித்துக் கேள்வி கேட்டேன். அவளால் பதில் சொல்லவே இயலவில்லை. துண்டு துண்டாக வார்த்தைகள். அதுவும் விளங்காத உளறல்.
'
‘இப்படி எவ்வளவு நாளாக இருக்கிறது?’
'
‘சிறுபிள்ளையிலிருந்தே.’
'
‘என்ன காரணம்?’
'
‘வாய் பேச முடியாத தோழி இவளுக்கு உண்டு. அவளுடன் பழகியதால் இந்த நிலை’.
'
என்னால் இதை ஏற்க முடியவில்லை. வாய் பேசாதவர்கள் என்று எவரும் கிடையாது. செவி கேளாததனால்தான் நாவு இயங்க்hமல் போனது. இவரை காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் காட்டி மருந்து கொடுத்தோம். பலன் இல்லை. கணவர் தெரிவித்தார்.
'
ஹோமியோபதியில் சிறுவயதிலிருந்தே பேச்சில் குறைபாடுடன் உள்ளவர்களுக்கென்று ஒரு மருந்து உண்டு. அதை மூன்றாவது வீரியத்துடன் நான்கு பொட்டலங்கள் கொடுத்தேன். (மருந்தின் பெயரை மருத்து வாசகர்களின் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்).
'
ஒரு வாரம் பொறுத்து அந்த அன்பர் மீண்டும் வந்தார்.
'
‘அதிசயம் அய்யா’
'
‘சொல்லுங்கள்’
'
‘இது புனிதமான ரமலான் மாதம். எங்கள் ஊரில் விடியற்காலை மூன்று மணிக்கு தெருவில் நகாடா வாசித்து யாவரையும் துயில் எழுப்பும் வழக்கம் உண்டு. நீங்கள் மருந்து கொடுத்த இரண்டாம் நாள் என் மனைவி என்னை உறக்கத்திலிருந்து எழுப்பினாள். நகாடா அறைகிறதே கேட்கவில்லையா? தொழுகைக்கு தயார் ஆக வேண்டுமே. எனக்கு உடல் புல்லரித்துப் போயிற்று. இத்தனை ஆண்டுகளாக இதுநாள் வரையில் தம்பட்டம் ஒலித்துள்ளது. அதை அவள் செவியுற்றதேஇல்லை. இன்று தெளிவாகக் கேட்டிருக்கிறாள். மேலும் தற்போது குழறாமல் பல சொற்களை உச்சரிக்கிறாள், உங்களுக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே புரியவில்லை?
'
‘எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். அது மேதை ஹானிமனுக்கு உரித்தாகும்’ அடக்கமாய்ப் பதிலிறுத்தேன்.
'
‘மூங்கையான் பேசலுற்றான்’ என்ற சொற்றொடரைக் கம்ப நாடன் உரைக்கின்றான். ‘மூகம் கரோதி வாசாலம்’ என்று தியான சுலோகம் பேசும். இத்தகைய பேரதிசயங்கள் ஹோமியோபதி மருத்துவத் துறையில் மட்டுமே நிகழக்கூடும். சுரப்பிகளே இயங்காத நிலையில் உள்ள மந்தமான சிறுவனுக்கு வியர்வைச் சுரப்பிகளை ஊக்கி வைத்து எல்லோரையும் வியக்கச் செய்தவர் மருத்துவ மேதை த.சா.ராசாமணி அவர்கள்.
இந்த வாய்ப்புகளை வெளியிடத்தான் எந்த நாளேட்டிலும் இடமில்லை. 
‘பூவிலே உயர்ந்த பூ? என்று கவிதை பாடத்தான் அவர்களுக்குத் தெரியும்.
'
இந்த நிலைக்கு நமது முந்தைய மருத்துவர்களையும்தான் குறை கூறுவேன். அவர்கள் ஆழ்ந்து படிப்பதில்லை. சிந்திப்பதில்லை, விவாதிப்பதும் இல்லை. தெளிவான, பயனுள்ள எண்ணங்களைப் பரப்ப நம்மிடையே நல்ல ஏடுகளும் இல்லை.
'
மிகினும், குறையினும் துயர் செய்யும் என்றும் 
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 
என்று துணிவுடன் வரைந்த வள்ளுவப் பெருந்தகைக்கு நன்றி கூறுகிறேன்.
'
'
***
ஹோமியோபதி அற்புதங்கள் 
புத்தகத்திலிருந்து
***********
மேஜர் தி.சா.இராஜூவின் அற்புதங்கள் தொடரும்............