ஸ்கால்டனின் வழி முறையில் ஹோமியோ விதிகள்
பழ.வெள்ளைச்சாமி1. ஒத்தவை விதி பின்பற்றப்படுகிறது.
2. ஒரு துயரருக்கு ஒரு மருந்து.
3. குறைந்த அளவு மருந்து.
4. வீரியப்படுத்தப்பட்ட மருந்துகள்.
5. ஹெர்ரிங்ஸ் விதிமுறைகள் என்று அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
ஆனால் பல மருந்துகள் நிரூபணம் செய்யப்படாதவை என்பது உண்மைதான். ஆனால் அது பெரிய குறையில்லை. ஏனெனில் ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்ட மருந்துகளின் குறிகளும் அவற்றின் இயற்கைப் பண்புகளும் ஒத்து இருக்கின்றன. இந்த உண்மையை அனைத்து மருந்துகளிலும் காணலாம்.
இதிலிருந்து ஒரு பொருளின் இயற்கைப் பண்பு தெளிவாகத் தெரியும்பட்சத்தில் அந்த மருந்தை அத்தகைய பண்பை ஒத்தத் துயரருக்கு கொடுக்கப்படும்போது அவரை நலமாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே நிரூபணம் செய்யப்படாதவை என்ற காரணத்தினால் மட்டும் ஸ்கால்டனின் தனிம மருந்துகளைப் பயன்படுத்தாமல் விடுவது ஹோமியோபதிக்கு நல்லதல்ல. ஒரு எளிய முறையை இழந்தவர்களாகி விடுவோம்.
ஸ்கால்டன் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.
ஹோமியோபதியில் நோய்க்கு மருந்து என்பதற்குப் பதிலாக, நோயாளருக்குத்தான் மருந்து என்று வலியுறுத்துகிறோம்.
நோயாளிக்கு மருந்து கொடுக்க, நோயாளியைப் புரிந்து கொண்டு தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டும்.
நோயாளியைத் தனித்துவப்படுத்திப் பார்க்க மற்ற எதையும் விட அவருடைய மனநிலையை அறிவது என்பது மிகவும் எளிதானதாகவும், மிகவும் சிறப்பானதாகவும் இருக்கும்.
ஏனெனில் ஆர்கனான் 6-ஆம் பதிப்பின் 211-வது மணிமொழியில் கூறியுள்ளபடி ஒரு துயரருடைய மனநிலை அல்லது சுபாவம் என்பது தீர்மானகரமான சிறப்பியல்புக் குறியாக இருப்பதால் அது மருந்து தேர்வு செய்வதைத் தீர்மானிப்பதில் முதன்மையானதாக இருக்கிறது.
இதனடிப்படையில் ஸ்கால்டன் அவர்கள் துயரரின் மனநிலையை விவரிப்பதையே பிரதானமாகக் கொண்டுள்ளார்.
இங்கே ஸ்கால்டன் அவர்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்.
ஒரு மனிதனுடைய மனநிலை என்பது அந்தரத்திலிருந்து வந்ததல்ல. அது அவனுக்குப் புறச்சூழலால் ஏற்பட்டது.
மனிதன் என்பவன் ஒரு சமூக ஜீவி என்று மனிதனைப் பார்க்கிறார்.
மனிதன் தோன்றியது முதல் இறக்கும் வரை அவன் தனித்து வாழாதவன். அவன், நான் என்ற தன்னிலையிலிருந்து உலகத்தைப் பார்க்கிறான். அவனுக்கு உறவு ஏற்படுகிறது. அவனுக்கென்று தொழில் ஏற்படுகிறது. அவனுக்கென்று பொழுதுபோக்கு மற்றும் படைப்பாற்றல தோன்றுகிறது. அவன் ஆளுமையுடையவனாக ஆகிறான். முடிவில் பிரபஞ்ச மனிதனாக அதீத ஆற்றல் உள்ளவனாக மாறுகிறான். ஆகையால் மனிதன் தனித்தவன் இல்லை. அவனுடைய மாற்றங்கள் அவனை மட்டும் சார்ந்தது இல்லை. எனவே அவனுடைய மனநிலையைத் தீர்மானிப்பதில் புற உலகத்தின் பங்கை டாக்டர் ஸ்கால்டன் உணர்ந்திருக்கிறார்.
மனிதனின்
உறவில்,
தொழிலில்,
படைப்பில் மற்றும்
ஆளுமையில்
முரண்பாடு ஏற்படும்போது அந்த முரண்பாடு, ஆக்கத்திற்குப் பயன்படாதபோது அவன் மனநிலை மாறுகிறது அல்லது அதற்கொத்த மனலை அவனிடத்தில் தோன்றுகிறது.
எனவே, ஸ்கால்டன் அவர்கள் ஒரு மனிதனுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள
அவனுடைய உறவைப் பார்க்க வேண்டும்.
தொழிலைப் பார்க்க வேண்டும்.
அவனுடைய பொழுதுபோக்கைப் பார்க்க வேண்டும்.
அவன் ஆளுமையைப் பார்க்க வேண்டும் என்று கருதுகிறார்.
எங்கே அவனிடத்தில் உள்ள முரண்பாடு, பகை முரண்பாடாக மாறியது என்பதை அறிந்தால் அப்போது அவனுடைய மனநிலையையும் அதைத் தீர்மானித்த காரணத்தையும் அறிய முடியும்.
அது அவன், தனிமங்களின் அணு எண்படியான பட்டியல்படி எந்தத் தொகுதியில் இருக்கிறான், எந்தப் படிநிலையில் இருக்கிறான் என்று எளிதில் அறிந்து கொள்ள உதவும்.
இந்த உண்மையை ஒரு சமூக உணர்வோடு மனிதனைப் பார்த்தால்தான் அவனுடைய மனநிலையைப் புரிய முடியும் என்று கூறுகிறார்.
ஸ்கால்டன் முறையில் மருந்து தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டியவை.
ஸ்கால்டன் அவர்கள் அவருடைய நூல்களை ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ச்சியாகப் படித்தால்தான் பயன்படுத்த முடியும் என்று கூறவில்லை.
எங்கே படிக்க வேண்டிய தேவை இருக்கிறதோ, அங்கே படித்தால் மட்டும் போதும் என்கிறார்.
அவர் ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு படிநிலைக்கும் கருப்பொருள்களை (theme) வகுத்துள்ளார். அந்தப் பண்பை மையப்படுத்துகிற அடிப்படைச் சொற்களை ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு படிநிலைக்கும் உருவாக்கித் தந்திருப்பதன் மூலம் மருந்து தேர்வு செய்வதை எளிமைப்படுத்தியுள்ளார்.
நாம் தொகுதி, படிநிலைகள் பற்றிய அறிவே இல்லாமல் கூட அவர் ஒவ்வொரு தனிமங்களைப் பற்றியும் தனிமங்களின் கூட்டு வேதிப் பொருட்கள் பற்றியும் விவரித்துள்ள வரை படத்தை ஒரு மருந்துகாண் ஏட்டைப் படிப்பது போல் படித்தாலே ஸ்கால்டன் முறையில் மருந்து தேர்வு செய்வதற்குப் போதுமானதாக உள்ளது. ஏனெனில், அதில் மனிதனுடைய சூழல் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஸ்கால்டன் வழிமுறையில் மருந்து கொடுக்க குறிகளைப் பார்க்க வேண்டியது பெரும்பாலும் தேவை இருப்பதில்லை. குறிகளை வகைப்படுத்தாதபோது மருந்துகாண் ஏடும் தேவைப்படாது.
மருந்துகாண் ஏடும் இல்லாமல் குறிகளை வகைப்படுத்தாமல் துல்லியமாக துயரரின் மனநிலையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
மேலும் தனிமங்களை மனித உறவுகளோடு ஒப்பிட்டிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அதாவது
மூரியாடிகம் - அம்மா
கார்பானிகம் - அப்பா
பாஸ்பரஸ் - உடன் பிறந்தவர்கள்
சல்பர் - கணவன் மனைவி உறவு
என்று தனிமங்களைப் பார்ப்பது. மனிதர்களை எளிதில் வகைப்படுத்தி மனநிலையைப் புரிந்து கொண்டு மருந்து கொடுக்க முடிகிறது.
ஸ்கால்டனைப் புரிந்து கொள்ள.
1. ஸ்கால்டனைப் புரிந்து கொள்வதற்கு ஒருவன் சமூக சிந்தனையுள்ளவனாக இருக்க வேண்டும்.
2. மனிதனை சமூக ஜீவியாகப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
3. சமூகத்தில் உறவு முறைகளில், தொழில் மற்றும் ஆளுமையில் என எங்கெல்லாம் முரண்பாடு ஏற்படும், எப்படி ஏற்படும் என்ற சமூக அறிவியலை நன்கு கற்றறிந்து, மக்கள் வாழ்வோடு ஒன்றியவர்களாக இருக்க வேண்டும்.
4. இயற்கை விதியை அறிந்தவராக இருக்க வேண்டும்.
ஹோமியோ மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்.
டாக்டர். சாமுவேல் ஹானிமன் ஆர்கனான் 6-ஆம் பதிப்பில் மணிமொழி 4-இல் கூறியது போல, ஹோமியோ மருத்துவர் நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்பதை அறிந்து, அவற்றை ஆரோக்கியமான மனிதர்களிடத்திலிருந்து அகற்றத் தெரிந்திருக்க வேண்டும். ஸ்கால்டன் நோய்க்கான காரணி, சமூகத்தில் உள்ள முரண்பாடுகள்தான் என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அதனால் ஒவ்வொரு ஹோமியோ மருத்துவரும் நோயை நலமாக்குகிற மருத்துவராக மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த சமூகத்தையே மாற்ற வேண்டும் என்ற மன உறுதியுள்ளவராக மாறினால்தான் மனிதனை முழுமையாக நலமாக்க முடியும். புதிய மனிதனை உருவாக்கி, புதிய சமூகத்தைப் படைக்க முடியும்.
No comments:
Post a Comment