Sunday, 12 March 2017

அம்மோனியா என்ற அருமருந்து

[ஹோமியோபதி அற்புதங்கள்
மேஜர் தி.சா.இராஜூ]
'
பல ஆண்டுகளுக்குப் பின் நான் மீண்டும் அனிருத்தனைச் சந்தித்தேன். பங்களாதேஷ் விடுதலைப் போரில் அவன் என் படைப்பகுதியில் பணிபுரிந்தான். பாகிஸ்தானியக்குண்டு ஒன்று வெடித்து அதன் விளைவாக அவன் ஒரு காலை இழந்தான். செயற்கைக் காலுடன் அவன் தொடர்ந்து பணியாற்றினான். ஊனமடைந்த நிலையிலும் அந்தப் போரில் பங்கு பெற்றவர்கள் பணிபுரியலாம் என்று அப்போதைய பாரதப் பிரதமர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அனிருத்தன் ஊனமுற்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவன் போரில் மரணமடைந்து விட்டதாகக் குடும்பத்திற்குச் செய்தி அனுப்பச் செய்தான்.

அதற்குக் காரணமிருந்தது. அவனுக்கும் ஓமனக்குட்டிக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஊனமுற்ற நிலையில் அவள் அவளை மணக்க விரும்பவில்லை. ஓமனக்குட்டியோ திலகவதியைப் போல் அருஞ்செயல் புரிந்தாள். வாழ்க்கையைத் துறந்து கன்னிமாடத்தில் சேர்ந்து சமயத்தொண்டாற்றினாள். இந்த விவரங்கள் எல்லாம் அனிருத்தனே என்னிடம் கூறி தன் மனச்சுமையைக் குறைத்துக் கொண்டான்.

கோப்புகளில் என் கையொப்பம் பெறுவதற்காக சிலர் வரிசையில் நின்றனர். அவர்களில் அனிருத்தனும் இருந்தான். காத்திருந்த பத்து நிமிடங்களில் அவன் பலமுறை கழிப்பிடத்திற்குச் சென்று திரும்பினான். தும்மலும், இருமலும் ஒரே மூக்கடைப்பு அருகில் வந்ததபோது அவருடைய கைக்குட்டையில் பல கருப்புத் திட்டுகள் இருந்ததைக் கண்டேன்.
'
‘வழி நேரம் ஸாரினைக் காணான் ஒக்குமோ?’ (மாலையில் தங்களைச் சந்திக்கலாமா?) இது அவனுடைய கேள்வி.
'
‘ஆறு மணிக்கு வா. இந்த நேரத்தில்தான் நான் அன்பர்களை சந்திக்கிறேன்’ நான் பதிலளித்தேன். அற்பசங்கையை முடித்துக்கொண்டு அவன் தன்னறைக்குத் திரும்பினான். \
மாலை அனிருத்தன் என்னைச் சந்தித்து தன் உபாதைகளை விவரித்தான்.
அவற்றைப் பதிவு செய்து கொண்டேன்.
இரண்டு சிறப்புக் குறிகள் தலை தூக்கி நின்றன.
1. காலையிலேயே மூக்கடைப்பு
2. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம்.
'
அனிருத்தனுக்கு நான் கொடுத்த மருந்து அம்மோனியம் ம்யூரியாடிகம். ஆறாவது வீரியம் மூன்று பொட்டலங்கள்.
ஒரு வாரம் பொறுத்து அவனைக் கால்பந்து மைதானத்தில் சந்தித்தேன். ஒரு காலத்தில் அவன் சிறந்த கால்பந்தாட்டக்காரனாக இருந்தான். இப்போதம் அவனைப் பழைய ஆசை விடவில்லை. அடிக்கடி விளையாட்டு மைதானத்திற்குச் சென்று நண்பர்களுக்கு ஆலோசனை வழங்கினான். அவர்களை ஊக்குவித்தான். விளையாட்டுத் திடலில் அவனைக் காணும்போதெல்லாம் என் நெஞ்சு துணுக்குறும்.
எது கிட்டாதோ அதைத் தேடி அலைகிறேன். எதை நான் விரும்பவில்லையோ அது எனக்கு வசப்படுகிறது என்று குருதேவர் தாகூரே கூறி வருந்துகிறார். அனிருத்தனின் வாழ்க்கையில் அந்தச் செய்தி உண்மையானது கண்டு நான் உளம் வெதும்பி நின்றேன்.
'
"இந்நிலை நான் ஸாரினைக் காணான் வன்னு அத்யேகம் புறத்துப்போயி"
‘நேற்று தங்களைக் காண வந்தேன் நீங்கள் வெளியே போயிருந்தீர்கள்?’ அனிருத்தன் கூறினான்.
அகம், புறம் தூய தமிழ்ச் சொற்கசள் மலையாளத்தில் உள்ளதைக் கண்டு நான் பூரித்துப் போவேன்.
'
தூய தமிழ் சொற்கள் மற்ற திராவிட மொழிகளில் இருப்பiதை அறிவது இனிய அனுபவம். அவை வடமொழியிலும் உள்ளன.
அனிருத்தன் த்ன் உடல்நிலைப் பற்றிக் கூறினான். சளித் தொந்தரவு, மூக்கடைப்பு அனைத்தும் முற்றிலுமாக நீங்கி விட்டன. இன்னொரு விவரம் தங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என் கால் வெட்டப்பட்ட இடத்தில் எப்போதும் ஒரு வேதனை இருந்த வண்ணம் இருந்தது. எவ்வளவோ வலிக் குறைப்பு மருந்துகள், ஊசிகள். ஆனால் வேதனை குறையவே இல்லை. ஆனால் கடந்த மூன்று நாட்களாக எந்தத் தொந்தரவும் தற்போது இல்லை. அவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.
'
எனக்கும் இது புதிய தகவல். நான்மருத்துவ மேதை கெண்டின் நூலைப் புரட்டினேன். அவர் இந்த வகையில் ஏதும் குறிப்பிடவில்லை. என் ஆசான் தந்துள்ள விவரங்களைப் புரட்டிப் பார்த்தேன். துண்டிக்கப்பட்டட நரம்புப் பகுதியில் ஏற்படும் வேதனையை இந்த மருந்து போக்கிவிடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
என் ஆசான் ஒரு மாகடல். லிப்பே, ஃபாரிங்டன், ஃபௌபிஸ்டர் ஆகிய நூலாசிரியர் தெரிவித்துள்ள விவரங்கள் எல்லாம் அவர் விரல் நுனியில் இருக்கும். அம்மோனியம் ம்யூரியாடிக்கம் குறித்த இந்தத் தகவலை அவர் என்னிடம் தெரி.த்திருந்தார். இதை போயரிக்கும் குறிப்பிட்டிருப்பதை நான் பின்னாளில அறிந்து கொண்டேன். இந்த விவரத்தை மறக்காமல் நான் என்னுடைய இரண்டாவது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
.
.........ஆண்டுகள் பல உருண்டு விட்டன. கடந்த மாதம் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த அன்பர் அதைச் சென்னையிலிருந்து எழுதியிருந்தார். பெயர் ஜகன்னாதன். ஒரு விபத்தில் சிக்கி அவர் தமது கையை இழந்து விட்டார். காயம் குணமடைந்து விட்டது. ஆனால் வேதனை எப்போதும் தொடர்ந்து இருந்தது.
அவர் எழுதுகிறார். ‘இந்தத் துயரத்தைத் தணிக்க ஹோமியோபதி உட்பட பல மருத்துவ முறைகளை மேற்கொண்டேன். நிவாரணம் கிடைக்கவில்லை. நண்பர் ஒருவர் பரிவுரை செய்ததன் பேரில் உங்கள் புத்தகத்தைப் புரட்டினேன். ‘விபத்து’ என்ற தலைப்பில் நவச்சாரம் குறித்து எழுதியிருந்தீர்கள். ஆறாவது வீரியத்தில் அதைப் பயன்படுத்தினேன். எனக்குக் குணம் கிடைத்தது என்று எழுதியிருந்ததோடு தனது புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.

நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன். தொலைதூரத்தில் சுலபமாக உட்ட முடியாத இடங்களில் மருத்துவத் தொண்டு புரியும் அன்பர்களுக்காக நான்இந்த மருத்துவ இலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கிறேன். அது பலன் தருவதைக் கண்டு இறைவனின் அருளை எண்ணி வியக்கிறேன். ‘ஹோமியோபதி ஒரு வாழ்கலை, விஞ்ஞானம் என்ற அனது நூலில் (பக்கம் 360-61) எழுதியுள்ள விவரத்தை இங்கு குறிக்க விரும்புகிறேன்.


நவச்சாரம்

இதினின்று தயாரிக்கப்படுவது அம்மோனியம் ம்யூரியாடிக்கம்.  விரல் நுனிகளில் எல்லாம் புண்பட்டதைப் போன்ற நோவு.  குதிகாலில் இரண வலி.  தசை நார்கள் குறுகிப் போவதால் ஏற்படும் சியாட்டிகா என்ற நரம்பு வலி.  இவற்றிற்கு இந்த மருந்து மிகச் சிறந்த பயனை அளிக்கும்.  வெட்டி எடுக்கப்பட்ட பகுதி மிகுதியில் நரம்பு தொடர்பான வலி ஏற்பட்டாலும், இம்மருந்து செயற்கை உறுப்புகளுடன் நடமாடும் பல படை வீரர்களின் சிரமங்களை இது போக்கிற்று என்பது நான் அறிந்த உண்மை.
இறைவன் பரம கருணை உடையவன்.
அம்மோனியம் உப்பு இனத்தைச் சேர்ந்தது.  காரப் பொருள் (ஆல்கஹால்) நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பு (சோடியம் குளோரைடு) இரு வகைகளில் கிடைக்கிறது.  ஒன்று கடலுப்பு மற்றது கல்லுப்பு.  தென்னாட்டில் கல்லுப்பை இந்துப்பு என்று அழைப்பார்கள்.  இது மருந்துக் கடைகளில் மட்டும் கிடைக்கும்.  தென்னாடு கடலினால் சூழப்பட்டுள்ளது.  அந்த நீரைக் கரைக்குப் பாய்ச்சி சூரிய வெப்பத்தினால் உலர வைத்து கடலுப்பு தயாராகிறது.  இந்த இடத்தை உப்பளம் என்று அழைப்பார்கள்.  வடஇந்தியாவில் மளிகைக் கடைகளில் கல்லுப்பே கிடைக்கும்.  பெரும் துண்டுகளாக இருக்கும்,  அவற்றை உடைத்து உபயோகிப்பார்கள்.  பஞ்சாபில் இதற்குப் பெயர் ‘லூன்’ என்பதாகும்.  வங்கத்தில் ‘லொபன்’.  இரண்டுமே லவணம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு.  இமயமலை முழுவதும் ஒரு காலத்தில் கடலடியில் மூழ்கிக் கிடந்தது.  அதன் காரணமாகவே மலைப்பிளவுகளில் உப்புப் பாளங்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
உலகத்தின் தொன்மையான நாகரிகம் உள்ள நாடுகளில் எகிப்தும் ஒன்று.  யூத, கிறிஸ்துவ சமயங்கள் தோன்றும் முன்னரே அங்கு ஒரு பழமையான சமுதாயம் வாழ்ந்து வந்தது.  அர்கள் கட்டடக் கலையில் கைதேர்ந்தவர்கள்.  அங்குள்ள பெரிய கற்சிலைகளும் பிரமிடுகளும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.  முக்கோண வடிவில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் தம்முள், பாதுகாக்கப்படும் பொருட்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.  இந்த உண்மை அந்தப் பழங்கால எகிப்திய மக்களுக்குத் தெரிந்திருந்தது.  அவர்கள் கல்லினால அமைத்திருக்கும் பிரமிடுகளில் பாதுகாக்கப்படும் மனித உடல்கள் கூடப் பல ஆண்டுகள் கெடாமல் இருந்திருக்கின்றன.  ‘ஆமூன்’ என்ற எகிப்திய தேவதையின் பெயரிலிருந்து பிறந்ததே அம்மோனியா என்று மொழி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  ஒட்டகங்களின் சாணக் குவியல்கள் இறுகிப் போய் அம்மோனியப் பாறைகள் ஆயின என்று ஸ்டெட்மான்ஸ் மருத்துவ அகராதி (பக். 84) குறிப்பிடுகிறது. 
எகிப்து ஒரு பாலைவனப் பிரதேசம்.  அங்கு ஒட்டகங்களின் மந்தை மிகுதி.  ஆகவே இது உண்மையாக இருக்கக்கூடும்.  இந்த அம்மோனியா காரத் தன்மை வாய்ந்தது.  சிறந்த களிம்பு நீக்கி, இன்றும் செம்பு, பித்தளை  ஆகிய  உலோகங்களை இணைப்பதற்கு இந்தக் காரப் பொடியைப் பயன்படுத்துகிறார்கள்.  கடுமையான சளித் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பவர்கள்இதை மோர்ந்து பார்கும் உப்பாகப் பயன்படுத்துவார்கள்.  இது மூக்கடைப்பை நீக்கிவிடும்.  மூக்கின் வழியாகக் காற்றுப் பாதைக்குள் இறுகியிருக்கும் அடைப்புகளை இது விரைவில் இளக்கிவிடும்.  சிலர் உறிஞ்சிகளைப் [inhalers]  பயன்படுத்துவார்கள்.  இதனுள் அடைக்கப்பட்டிருப்பதும் அம்மோனியாவே.
தூய்மையான அம்மோனியா கிடைப்பது அரியதாகும்.  இது மற்ற உப்புகளுடன் கலந்தே கிடைக்கும்.  கார்பனேட், குளோரைடு, பாஸ்பரஸ் ஆகியவற்றுடன் இது சேர்க்கப்படும்.  ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவ இயல்பு உண்டு.  பொதுவாகப் பூந்தசைப் பகுதிகளில் அடைந்திருக்கும் சளியை நீக்குவதில் இது நிகரற்ற ஆற்றல் உடையது.
இந்த மருந்து மேதை ஹானிமன் காலத்து.  அவருடைய நாட்பட்ட நோய்கள் என்ற நூலில் இது குறித்து குறிப்புகள் உள.  இதை மெய்ப்பிக்கும்போது அவர் எத்தனை துயரங்களை மேற்கொண்டிருப்பார் என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.  உடல் உபாதைகள் மட்டுமின்றி, உளவியல் துறையிலும் இது சிறப்பாகப் பணிபுரிகிறது என்று மேதை கெண்ட் எழுதுகிறார். (பக். 99) அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆட்படும் மங்கையர், சிறப்பாக மாதவிலக்குக் காலத்தில் சிரமப்படும் தன்மையுடையவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து என்று அவர் கருதுகிறார்.
இதை என் அனுபவமும் உறுதிப்படுத்துகிறது.  நடுவயதைத் தாண்டிய ஒரு தாயார் எப்போதுமே புலம்பிக் கொண்டேயிருப்பார்.  பிறர் தன்னைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலே பொங்கி எழுவார்.  எவ்வளவோ நய உரைகளைக் கூறினாலும் ஏற்க மறுப்பார்.  இத்தகைய இயல்புள்ளவர்களுக்கு அம்மோனியம் கார்பனேட் சிறந்த மருந்தாக அமைவதை நான் கண்டிருகிறேன்.  மாதவிடாய் ஏற்படும் முன்பும், அந்த நிலையில் இருக்கும் பெண்களும் பல உள.  உடலியல் மாற்றங்கள் நிகழும்.  இது இயற்கை நியதி.  அதுகாரணம் பற்ய அவர்கள் அமைதியாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்று வகுத்தார்கள்.  அவர்களுக்கு குளியல் கூடாது என்தற்குக் காரணம் குளிர்ந்த நீர் போக்கைத் தடை செய்யும் என்பதே.
பல குடும்பங்களில் மாதர்கள் பணிபுரிந்தே ஆக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.  இது தவிர்க்க முடியாததென்றாலும், அவர்கள் அந்த நாட்களில் கடினமான உடலுழைப்பில் ஈடுபடாமல் இருத்தல் நலம்.
அம்மோனியா மிகுந்த காரத்தன்மை உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம்.  பூந்தசைப் பகுதியிலிருந்து வெளிப்படு எந்த ஒழுக்கும் மூக்கு, கண், வாய், பெண்ணுறுப்பு, சிறுநீர்ப்பாதை ஆகிய எவற்றிலிருந்தும் வெளிப்படும் புண்ணை உண்டாக்கும் அளவிற்கு எரிச்சலுடன் கூடியதாக இருந்தால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வர வேண்டியது அம்மோனியா.  கண்களிலிருந்து வெளிப்படும் ஒழுக்கின் காரத்தன்மைனால் இமை முடிகள் உதிர்ந்து போகும்.  இதையும் கெண்ட் குறிப்பிடுகிறார்.
இன்னொரு சிறப்புக்குறி வெளிப்பாட்டின் நிறம்.  அது கருநிறமாக இருக்கும்.  மூக்கிலிருந்து வெளிப்பம் சளி கூட அதே நிறத்தில் இருகும்.  விலக்கின்போ வெளிப்படமூ உதிரமும் அதே நிறமாகவே இருக்கும்.  சிறுநீரும், மலமும் கூட அதே நிறத்தில் அமையு  ஏனைய பல மருந்துகளுக்கும் இத்தகைய தன்மை உண்டு என்றாலும், வெளிப்பாடு காரத்தன்மையுள்ளதாக இருந்தால் அப்போது உறுதியான பயன்தருவது அம்மோனியா.
இதயத்துடிப்பு மிகுதல், படபடப்பு, கிறுகிறுப்பு ஆகிய இடர்களுக்கும் இது சிறந்த நிவாரணி.  பழங்காலத்திலிருந்தே மருத்துவர்கள் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  சித்த, ஆயுர்வேத முறைகளிலும்இதன் பெருமை பேசப்படுகிறது.
உடலும், முகமும் வீங்கி வெப்பம் அதிகரித்து உடலின் மேற்பகுதியில் புள்ளிகள் ஏற்பட்டு மயக்க நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இது உடனடி நிவாரணம் அளிக்கவல்லது.  இதை  எல்லா முறை மருத்துவர்களுமே ஏற்றுக் கொள்கின்றனர்.

Saturday, 11 March 2017

எயிட்ஸ் பற்றி................ அலோபதி மருத்துவருடன் ஒரு விவாதம்

எயிட்ஸ் பற்றி................
அலோபதி மருத்துவருடன் ஒரு விவாதம்

மேஜர் தி.சா.இராஜூ

திருவண்ணாமலையிலிருந்து செங்கம் செல்லும் பாதையில் அத்யேந்தல் என்ற சிற்றூர் உள்ளது. விக்டர் ஹ்யூகோ என்ற ஜெர்மானிய அன்பர் அதைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கு பல சிறந்த நலப்பணிகள் நடைபெறுகின்றன. அதில் ஒரு பிரிவு மருத்துவம்.
 அதன் தலைவர் டாக்டர்.ஆண்ட்ரியாஸ் எம்.டி.
ரமண மகரிஷிக்குப் பிறகு அவருடைய வழிமுறைகளைத் தெரிந்து கொள்வதற்காகவே டாக்டர்.விக்டர் ஹ்யூகோ சில நன்பர்களுடன் இங்கு வருகை புரிந்தார். தொடர்ந்து இங்கேயே தங்கி தொண்டு புரிந்தார்.
.
எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராமல் தொண்டு புரியும் பலர் ஐரோப்பிய நாட்டில் உள்ளனர். ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்பது கிறிஸ்துவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு. அது போற்றப்பட வேண்டியது.
.
டாக்டர். ஆண்ட்ரியாஸை எப்படியும் சந்தித்துவிட வேண்டுமென்று அவருடைய மருத்துவ முகாமுக்குச் சென்றேன். வெளியே பலதரப்பட்ட மக்கள் வரிசையில் நின்றனர். பல வயதினர், பல இனத்தவர் எல்லோரிடத்திலும் ஒரு நம்பிக்கை. அந்த வெள்ளைக்காரர் கைபட்டால் எல்லா நோய்களும் குணமாகிவிடுகின்றன என்று ஒரு மூதாட்டி தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு 264 நோயாளிகளை மட்டுமே அவரால் கவனிக்க முடிகிறது. எஞ்சியவர்கள் அந்த ஊரிலேயே தங்கி மறுநாள் சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள்.
எந்தத் துறையை மேற்கொண்டாலும் அதில் மக்களின் நம்பிக்கை என்பது வலுவான அடிப்படை. இதை இந்த மருத்துவர் பெற்றிருக்கிறார்.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர் கூறினார்.
‘ஹோமியோபதி மருத்துவம் குறித்து பல நூல்கள் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு இருக்கும் நேரம் மிகவும் குறைவு’ அவர் மன்னிப்பை வேண்டும் குரலில் பேசினார்.
.
‘என்னுடைய நிலையும் அதுவேதான். நாம் நடந்து கொண்டே பேசுவோம்.’
.
அவர் பல இடங்களைச் சுற்றிக் காட்டினார். மருத்துவச் செடிகளின் பராமரிப்பு குறித்து பேசினார். ஆயுர்வேதம், அலோபதி, அக்யூபங்சர், ஹோமியோபதி பிரிவுகளுக்கு அழைத்துச் சென்றார். அவற்றின் தலைமைப் பொறுப்பேற்றிருப்பவர்களை அறிமுகப்படுத்தினார்.
.
டாக்டரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். ‘எய்ட்ஸ் என்று ஒரு நோய் இருப்பதாக விளம்பரம் செய்கிறார்களே, அதை நீங்கள் நம்புகிறீர்களா?’
‘ஆய்வுக் களத்தின் மூலம் ஒரு செய்தி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதை எப்படி மறுக்க முடியும்?
 .
எய்ட்ஸ் என்பது என்ன?’ இது என் வினா.
.
‘வெளியிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்புத் திறனை அழிக்கும் தொகுப்பு என்பதே பொருள். அது ஒருவகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. அதற்கு மருந்தே கிடையாது.
'
"நீங்கள் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் எழுதிய நூலைப் படித்ததுண்டா?’ நான் வினவினேன்.
'
‘நான் தேர்வு பெற்றிருப்பது அலோபதித் துறையில்தான் என்றாலும் நான் ஹோமியோபதி முறையை நம்புகிறேன்.'
" உங்களிடம் கெண்ட் எழுதிய நூல் உள்ளதா?" (ஹோமியோபதி தத்துவ விளக்கப் பேருரைகள்) டாக்டர் அதை எடுத்து வந்தார்.
‘அதில் 51-ஆம் பக்கத்தை படியுங்கள்’-தணிந்த குரலில் அவர் அதைப் படித்தார்.
'
அதன் சாரம் இதுதான்- ‘கிருமிகளினால் நோய் ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால கிருமிகள் துப்புரவுப் பணியைச் செய்வதற்கே அங்கு வருகின்றன. ஆகவே கிருமிகளினால் நோய் ஏற்படுகிறது என்ற கொள்கை தவறானது. உலகத்தில் மனித இனத்தை அழிக்க எந்தப் படைப்பும் சிருஷ்டிக்கப்படுவதில்லை’.
.
உடனடியாக ஆண்ட்ரியாஸால் பதில கூற முடியவில்லை. மென்று விழுங்கினார். கிருமிகளினால் நோய் வருவதாக வைத்துக் கொண்டாலும் அதே கிருமிகளை உடலில் செலுத்தி நோயைத் தவிர்க்கலாமே? ஜென்னிங்ஸ் அதைத்தானே செய்தார். அதை ஹோமியோபதி மருத்துவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது வேறு விஷயம். எம் ஆசான் அம்மைப்பாலை உடலில் ஏற்றாதீர்கள் என்று படையினர் மருத்துவமனைகளுக்கே சென்று பிரசாரம் செய்வார்.
.
‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’
'
‘எயிட்ஸ் என்பது வெறும் புரட்டு. அப்படி ஒரு நோய் இல்லை என்பதே என் அடிப்படைக் கருத்து. இதுவரை எத்தனை எய்ட்ஸ்"""" நோயாளிகள் உங்களிடம் வந்திருக்கிறார்கள்?’
'
எவருமில்லை. இனி வருவார்களானால் அவர்களை உங்களிடம் அனுப்பி விடுகிறேன். அத்தகையவர்களை நீங்கள் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதையும் நான் உணர்கிறேன். ஏனெனில் மருத்துவர் கெண்ட் ஒரு மாமேதை. அவர் சொல்வது தவறாக இராது என்பது உறுதி.
இந்த விவரத்தை அன்பர் ராபி அவர்களிடம் தெரிவித்தேன். அவர் ஹோமியோபதி தத்துவத்தின் மெய்த் தொண்டர். அதன் தத்துவங்களை எளியமுறையில் விளக்குவார். பெரும் செயல்வீரரும் கூட.
.
‘வெள்ளை, வெட்டை, குட்டம் என்று நீங்கள் அடிக்கடி வலியுறுத்துவீர்களே, அது ஆயுர்வேத முறையானாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். ‘அவர் என்னைப் பாராட்டி மகிழ்ந்தார்’.
‘மருத்துவ அறிஞர்கள் ஏன் இது பற்றிச் சிந்திப்பதில்லை? எழுதுவதில்லை?’
.
‘சுவடு விழுந்த பாதையிலேயே நாம் சென்று கொண்டிருக்கிறோம். நீங்கள் நிறையக் கட்டுரை எழுதுகிறீர்கள். பலர் படிக்கும் ஏடுகளுக்கு நீங்கள் ஏன் இந்தச் செய்தியைத் தெரிவிக்கக்கூடாது?’ அவர் கேட்டார்.
.
‘என்னுடைய முயற்சியை அவர்கள் ஆதரிப்பதில்லை’
.
‘ஏன்?’
;
‘அவர்களுக்கு விளம்பரத்தின் மூலம் வரும் வருமானம் நின்றுவிடுமே’
.
நன்பர் நகைத்தார். நாம் சிந்திப்பதில்லை என்பது மட்டுமன்று. நமக்கு மக்கள் நலன் முக்கியமானதன்று. பொருள் வேண்டும். அதை எந்த வகையிலும் பெறலாம். பொது நலன் குப்பையில் போகட்டும்.
.
எய்ட்ஸ் என்று விளம்பர செய்யப்படுவது ஒரு பால்வினை நோய். இது ஓரினச் சேர்க்கையால் ஏற்படாது. பாலவினை நோய்களுக்கு நமது அம்புறாத்தூயியில் பல அருமருந்துகள் உள. அவற்றைப் பட்டியலிட இங்கு இடமில்லை.
நாம் சிந்திப்போம், செயல்படுவோம், உண்மையை மட்டும் உரக்கக் கூறுவோம்.
*****
மேஜர் தி.சா.இராஜூ வின் ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து...
***************************************
அற்புதங்கள் தொடரும்........................
***************************************************

Friday, 10 March 2017

இனி நாம் செய்ய வேண்டுவது யாது?

[ஹோமியோபதி அற்புதங்கள்
மேஜர் தி.சா.இராஜூ]

'
மிகவும் சிறப்பு மிக்க தலைப்பு வாசகம். இதை லியோ டால்ஸ்டாயிடமிருந்து கடன் வாங்கிக் கொள்ளுகிறேன். லியோ டால்ஸ்டாயின் பெயரை எழுதும்போது அவருடைய கருத்துகள் பொது உடைமைத் தத்துவத்திற்கு மலர்ச்சி தர எவ்வளவு தொலைவு பயன்பட்டன என்றும் எண்ணிப் பார்க்கிறேன்.
'
‘பிறந்த வீட்டின் பெருமையை உடன் பிறந்தவனிடம் பீற்றிக் கொள்வது போல’ என்று ஒரு பழமொழியுண்டு ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை’.
'
ஹோமியோபதி மருத்துவம் விஞ்ஞானபூர்வமானது, உறுதியாக நிவாரணம் அளிக்கக் கூடியது என்று நமக்குள்ளே புகழ்ந்து பேசிக் கொள்வதில் சிறப்பு ஏதும் இல்லை. மாற்றுக் கருத்து உடையவர்களையும் இத்துறைக்கு ஈர்க்க வேண்டும். அந்தத் துறையில் ‘அப்ரோச்’[ASSOCIATION FOR PROPAGATION OF CLASSICAL HOMOEOPATHY] Aproch Classical Homoeopathy தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம் -இன் பணி மகத்தானது.
‘மர்த்தனம் குண வர்த்தனம்’ ‘விஷம் விஷஸ்ய சமனம்’ (நீர்ப்பதனாலும், கடைவதனாலும் ஒரு பொருளின் ஆற்றல் அதிகமாகிறது. நஞ்சே நஞ்சுக்கு முறிவு) என்ற பரிவுரைகள் ஆயுர்வேதக் கோட்பாடுகள்.
அண்மையில் ஒரு சித்த மருத்துவ நிபுணரைச் சந்தித்து உரையாடினேன். அவர் கூறுகையில் போகர் என்ற சித்த மருத்துவர் சீன நாட்டிற்கும் சென்று திரும்பியவர், அவருடைய சமாதி பழனி மலையில் உள்ளது.
பழனியில் உள்ள பாலமுருகனின் திருவுருவம் நவபாஷாணத்தில ஆனது. சிலையில் உள்ளவை கந்தகம், பாதரஸம், ஆர்ஸனிகம், சயனேடு, சோடியம் ஆகியவற்றின் கூட்டு. இந்தச் சிலையின் மேல் தேன், நெய், வெல்லம், பழங்கள் ஆகியவற்றின் கலவையைச் சார்த்தி பிறகு அதை எடுத்து அன்பர்களுக்கு வழங்குகிறார்கள். பஞ்சாமிதத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டவர்களின் உடல் தொல்லைகள் பல நீங்கி விடுகின்றன என்பது கண்கூடு என்று அவர் கூறினார்.
இது ஹோமியோபதி அல்லாமல் வேறு என்ன? என்று நான் வினவினேன். சிறிது நேரம் விவாதித்த பிறகு அவர் அதை ஏற்றுக் கொண்டார். மருத்துவ அறிவின் எல்லைப் புள்ளியைத் தொட்ட சித்தர்களுக்கு அந்த ஹோமியோபதி முறையும் புரிந்திருக்கிறது என்பது தெளிவு என்று அவர் ஒத்துக் கொண்டார்.
.
ஆனால் மனக்குறிகளுக்கு வேறு எந்த மருத்துவ முறையாவது இவ்வளவு சிறப்பிடம் தருகிறதா என்பது ஒரு பெரிய கேள்வி.
.

ஒரு துயரர் சரிதை:

.
பல ஆண்டுகளாக, சுவாசக் குழல் கோளாறுகளினால் தொல்லையுற்று வந்த பேராசிரியர் என்னிடம் வந்தார். ஸைனஸைடிஸ், டான்ஸிலைடிஸ், ஃபாரஞ்சைடிஸ், லாரஞ்சைடிஸ், ப்ராங்கைடிஸ் என்று பெயரிட்டு பல காது, மூக்குத் தொண்டை மருத்துவ நிபுணர்கள் அவருக்கு மருந்து கொடுத்துப் பரிசோதித்திருக்கிறார்கள். மூக்கிற்கு மேல் துளையிட்டு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இவருக்கு எந்த சிகிச்சை முறையும் பலன் தரவில்லை. தும்மல், இருமல், மூக்கடைப்பு என்று வாழ்நாள் முழுவதும் தொல்லை. அவர் தமது துயரங்களை விவரித்துக் கொண்டே போனார். நான் வென்னீரிலே குளிக்கிறேன். குடிப்பதும் அதுவே தான்.
.
நான் வழக்கமாக நோயாளிகளைப் பார்க்கும் நேரத்திற்குப் பின்னால் அவர் வந்திருந்தார். ஏன் இவ்வளவு தாமதம் என்று அவரைக் கேட்டேன். இந்த நேரம் வரை எமகண்டம் என்று விடையறுத்தார். அவருடைய பெயர் மதிஒளி, ஒரு கல்லூரியில் இயற்பியல் போதிக்கிறார்.
நான் அதிகம் யோசிக்கவில்லை. கோனியம் மாக்குலேட்டம்-இரு மாத்திரைகள்-முப்பதாவது வீரியத்தில் தொடர் மருந்தாக இரு சீனி உருண்டைப் பொட்டலங்கள்.
‘காலையில் வெறும் வயிற்றில் வாயை நன்றாகக் கொப்பளித்த பிறகு’
அவர் மூன்று நாள் பொறுத்து வந்தார். முதல் பொட்டலம் உண்ட அன்ற ஒரே தும்மல், மூக்கொழுதல், இரவு மூக்கடைப்பு. இரண்டாவது மூன்றாவது மருந்துகள் (?) அவற்றைக் குணப்படுத்தி விட்டன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை குளிர்ந்த நீரில் குளித்தேன்.
தொடர்பாக நான் கொடுத்தது அதே மருந்தின் இரண்டு மாத்திரைகள்-வீரியம் இருநூறு.
.
பல மாதங்களுக்குப் பிறகு ஓர் இலக்கியப் பேரவையில் அவரைச் சந்தித்தேன். அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டார். அய்யா, தற்போது எனக்கு எந்தத் தொல்லையுமில்லை. எல்லாமே குளிர்ந்த நீர்தான். முன்பெல்லாம் அதைத் தொட்டாலே தும்மல் ஏற்படும். நான் மீண்டும் வந்து உங்களைச் சந்திக்காதது என்னுடைய குற்றம் தான்.
கவலை வேண்டாம். இயேசுபிரான் எழுவரைக் குணப்படுத்தினார். அவர்களில் ஒருவர் மட்டுமே தேவகுமாரனுக்கு நன்றி கூறினார் என்று கார்னிஜி எழுதுகிறார்.
 .
ஹோமியோபதி மருத்துவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளைப் பொருட்படுத்துவதே கிடையாது.
அந்த அன்பருக்கு நான் அந்த மருந்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் ஜே.டி. கெண்டின் ரெப்பர்ட்டரி, பக்கம் 85 (மூட நம்பிக்கை) SUPERSITIOUS -இக்கு கோனியம் மாக்குலேட்டம்தான் மருந்து என்பது அவருடைய கருத்து.
.
‘பொய்யுரையேன், சத்தியமே புகல்வேன்’ என்று வள்ளலாரைப் போல அடித்துப் பேசுகிறேன் இந்த மருத்துவமுறை மட்டுமே முழு நிவாரணம் தர முடியும். ஆகவே விரிவஞ்சி விடுகிறேன்.
.
"இனி நாம் செய்ய வேண்டுவது யாது?"
நோய்க் குறிகளைத் தேர்வு செய்யும்போது தவறாமல் மனக்குறிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதன் என்பவன் மட்டுமே ஆறாவது அறிவு படைத்தவன்.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து
மேஜர் தி.சா.இராஜூ
***********************************************************************
அற்புதங்கள் தொடரும்.......

Thursday, 9 March 2017

சோரியாஸிஸ்[PSORIASIS] என்றால் என்ன?
ஹோமியோபதியில் தீர்வு உண்டா??

Major T S Raju


என் முன்னால் அமர்ந்திருக்கும் மங்கையின் முகத்தைப் பார்க்கிறேன். மாநிறம் என்றாலும் வாளிப்பாதன உடல்வாகு. கண்களில் இனம் புரியாத சோகம். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரை வினவுகிறேன்.
'
‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’
'
‘சென்னை’ அவர் ஒரு முகவரியைக் கூறினார்.
'
‘நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறீர்கள்’ என்றேன்.
'
‘என் மனைவியின் சிற்றப்பா எங்களைக் காண வந்திருந்தார். அவருக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர். அவர்தான் எங்களுக்கு உங்கள் முகவரியைக் கொடுதூதார். அவருக்கு நெடுநாளாக முட்டி வலியும், சரும நோயும் இருந்தன. இரண்டையுமே நீங்கள் ஒருசேரக் குணப்படுத்திவிட்டதாகக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியோடு பேசினார். என் மனைவியின் நிலையைக் கண்டு உங்களிடம் சிகிச்சை பெறும்படி பரிவுரை செய்தார்’.
‘
'உங்கள் மனைவிக்கு உள்ள சுகவீனம் என்ன?’
'
'எங்கள் குடும்ப மருத்துவர் இதை சோரியாஸிஸ் என்று குறிப்பிடுகிறார். மூன்றாண்டுகளாக அவர் மருந்து கொடுத்தார். ஊசி போட்டார். நிரந்தரமான பலன் ஏதும் காணோம்.
நோயுள்ள பகுதி, சிகிச்சை முறை, அதன் விளைவு ஆகியவை பற்றிக் கூறினால் எனக்குப் பயனுடையதாக இருக்கும்
என் மனைவிக்கு உடலின் பல பாகங்களில் புடைப்பு ஏற்படுகிறது அது மற்ற இடங்களுக்கும் பரவுகிறது. ஊசி போட்டால் தடிப்பு மாறுகிறது. அரிப்பும் இல்லை. ஆனால ஓரிரு மாதம் பொறுத்து அரிப்பு தொடர்கிறது. வேறு இடங்களிலும் கிளைக்கிறது’.
'
‘இதனால் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?’
'
‘நாங்கள் அதிகம் மருத்துவ அறிவு இல்லாதவர்கள் நோய் வந்தால் மருத்துவரை அணுகுகிறோம். குணமளிக்கிறார்’.
'
‘நோயின் வேர் மருந்துகளினால அறுபடவில்லை. அதனால்தான் அது மற்ற இடங்களில் புடைத்துத் தன்னை வெளிக்காட்டுகிறது’.
'
‘சோரியாஸிஸுக்கு உங்கள் மருத்துவ முறையில் நிவாரணம் உண்டா?’
'புரியவில்லை அய்யா,
‘ஹோமியோபதி மருத்துவ முறையில் நோய்க்குறித் தொகுப்புக்குப் பெயர் ஏதும் கிடையாது. தோலின் மேல் ஏதாவது சுகவீனம் ஏற்பட்டால் நாம் மகிழ்ச்சி அடை யவேண்டும்’
'
'உங்கள் கூற்று வியப்பைத் தருகிறது.'
'
'உடலில் ஏற்படும் கழிவுப் பொருள்களான சிறுநீர், வியர்வை, மலக்கழிவு ஆகியவை உரிய முறையில், அளவில் வெளிப்பட வேண்டும். அந்தப் பாதைகளில் தடையோ, தயக்கமோ இருந்தால, அது தோல் வழியாக வெளிக்காட்டும். சர்மம் நமது உடலின் சாளரம். இதன் வழியே அழுக்குகள் வெளிப்படும்போது களிம்புகளின் உதவி கொண்ட அதை உள்ளே அமுக்க முயற்சி செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அது உடலின் உள்ளுறுப்புகளைத் தாக்கும்.'
'
நான் என் பரிசோதனைகளைத் துவக்குகிறேன். அது ஒரு நீண்ட பட்டியல். அந்த மங்கைக்குக் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மூக்கு, தொண்டை அழற்சி உள்ளது. எப்போதும் சளி, சில சமயம் மஞ்சள் அல்லது பச்சை அதனுடன் கூடி, தோலின் மேல் புடைப்புகள், தலையிலும் புடைப்பு சுற்றிலும் சிறு சிறு புண்கள். வெள்ளைத் துகள், அரிப்பு எப்போதுமே உள்ளது. நாவு இலேசான மஞ்சள் கலந்த வெள்ளை. இவை சில குறிகள் மட்டுமே.
'
பழைய நிகழ்ச்சி ஒன்று என் நினைவுக்கு வந்தது. எங்கள் மருத்துவமனைக்கு முப்பது வயது மதிக்கத்தக்க மங்கையைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். அவளுடைய பார்வை, உடலசைவு, பேச்சு அனைத்துமே பிபறருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தன. அவருடைய கணவர் அவரைப் படிமானத்தில் வைத்திருந்தார். அவள் முரண்டினாள். கணவன் வன்முறையை பிரயோகிக்க முயன்றார். என் ஆசான் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.
பரிவுடன் நோயாளியைக் கவனித்தார். பேசினார் ஆசான். விவரங்களைப் பதிவு செய்யும்படி என்னைப் பணித்தார்.
'
‘உங்கள் கணவரைத் தவிர வேறு யாராவது உடன் வந்திருக்கிறார்களா?’
'
‘நாயனகாரு உள்ளாரு அவறே விடையிறுத்தாள்’
'
அவரை உள்ளே அழைத்தார் ஆசான். ‘உங்கள் மகளுக்கு எப்போதாவது தோல் வியாதி வந்திருக்கிறதா?’
'
‘இப்புடு காதண்டீ, இரு சகஸ்ரம் முந்துக.. அந்த பாகாயி போயிந்தி, இது இப்புடே இலாக கேசிந்தி’
'
ஆசான் என்னைப் பார்த்துக் கூறினார். மெர்க் சொல்.12, ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு ஒரே முறை, இறுதியில் லூட்டிகம் 200 ஒரே தடவை.
மருந்தை மடித்து அவரிடம் கொடுத்தேன். மருந்து உண்ணும் முறையை ஆசான் முதியவருக்கு விளக்கினார்.
'
நான்காம் நாள் அந்தப் பெரியவர் மருத்துவமனைக்குப் பரபரப்புடன் ஓடி வந்தார். அவரைத் தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாக இருந்தது. ‘உடம்பு முழுவதும் தடித்து வீங்கி என் மகள் கதறுகிறாள்’
'
‘என்ன சொல்லுகிறார்?’
'
‘அரிப்புப் பொறுக்க முடியவில்லையாம்’
'
‘மற்றபடி ஏதாவது கோளாறு?’
'
‘சாந்தமாகவே இருக்கிறாள். கூச்சல், திட்டல், பேயாட்டம் எல்லாம் ஓய்ந்து விட்டது.’
‘ஏன், போயே போயிந்தி’
'
என் ஆசான் முறுவலித்துவிட்டு என்னை நோக்கிப் பணிந்தார். ‘ஸாக்லாக்’ நான் அவற்றை மடித்துக் கொடுத்தேன்.
'
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரே ஒரு முறை அந்த மங்கையும், அவளது தந்தையும் வந்தனர். ஒரு கூடை நிறையப் பழங்கள்.
'
என் ஆசான் காலைத் தொட்டு வணங்கினார்கள். அவர் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.
'
உள்ளுக்கு அமுக்கப்பட்ட மியாசம் (தோஷம்) மனநிலையையும் எப்படிப் பாதிக்கக்கூடும் என்ற விபரம் எனக்கு அன்றுதான் விளங்கிற்று.
சென்னையிலிருந்து வந்த அந்த மங்கைக்கு நான் கொடுத்தது மெர்க்யூரியஸ் 6 ஒரு வாரத்திற்கு இறுதியில் லூட்டிகம் 200 ஒரே தடவை.
'
அந்த மங்கையின் கணவர் என்னைக் கேட்டார். ஹோமியோபதி முறையில் நோய்கள் அதிகரிக்கும் என்று எங்கள் குடும்ப மருத்துவர் கூறினார். அப்படி ஏதாவது நேருமா?
'
‘அப்படி நிகழ்ந்தாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம். விரைவில் குணமாகிவிடும்’
'
ஸோரியாஸிஸ் என்பது கிரேக்க மொழிச் சொல். ஃப்ரான்ஸ் நாட்டினர் இதை ஸோரா என்று அழைக்கின்றனர். அரிப்புடன் கூடிய சொறி, சிரங்கு என்று அதற்குப் பொருள்.
'
மேதை ஹானிமன் ஸோராவுக்குக் கூறும் விளக்கம் பல பக்கங்களில் உள. மனித குலத்தின் மிகத் தொன்மையான தோஷம் (மியாஸம்) இது. உடல் இயக்கமே குலைந்து போன ஒரு நிலையைத்தான் ஸோரா என்று கூற வேண்டும் அவர் அருள்கிறார்.
சென்னையிலிருந்து எனக்குக் கடிதம் வந்து விட்டது. கடந்த மூன்று மாதங்களாக அந்த மங்கைக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.
'
ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைக்கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித உடலில் ஜீவசக்தி ( VITAL FORCE) என ஒன்று உள்ளது. அது நலிவுறும்போது பல குறிகளை வெளிப்படையாகக் காட்டுகிறது. அந்தக் குறியையே நோய் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். அதனால் நோயின் பெயருக்கு மருந்தென்பது கிடையாது.. ஒவ்வொரு நோயாளியின் நோய்க்குறிகளும் தனித்தன்மை கொண்டதே.அதனால் ஒவ்வொருவருக்கும் மருந்தும் தனித்தனி தான்.. இது தான் ஹோமியோபதி
'
நோயாளியின் நலனைக் கருத்தில் கொண்டு ஆழ்ந்த கவனத்துடன் உழைத்தால், அதற்கு உறுதியான பயன் உண்டு என்பது ஒரு பரமசத்தியம்.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து
*******************************************************************
மேஜர் தி.சா.இராஜூவின்
அற்புதங்கள் தொடரும்
*******************************************

Tuesday, 7 March 2017

ஹோமியோபதி முறையில் தடுப்பு மருந்துகள்

மேஜர் தி.சா.இராஜூ

'
எல்லாப் பொருளையுமே உள்ளடக்கிய நமது திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் பத்துப்பாக்கள் உள்ளன. இவை மருத்துவ சாத்திரத்திற்கே ஆதாரமாகும்.
நோய்த் தடுப்பு முறைகள் குறித்தும் ஒரு குறள் அதில் உள்ளது. அது,
'
நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்பதாகும்.
'
முதன்மையாக ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைக கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித உடலில் ஜீவசக்தி ( VITAL FORCE) என ஒன்று உள்ளது. அது நலிவுறும்போது பல குறிகளை வெளிப்படையாகக் காட்டுகிறது. அந்தக் குறியையே நோய் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். இந்த நோய் பாரம்பரியத்தினாலும், தவறான உணவை உட்கொள்ளுதல் மூலமும், சூழ்நிலையினாலும் ஏற்படக்கூடும்.
'
சூழ்நிலை என்பது, கால வேறுபாட்டினாலும், எளிதில் பரவக்கூடிய நோயுள்ளவர்கள் வாழும் இடத்தில் வசிப்பதாலும், பணிபுரிவதாலும், தூய்மை குறைந்த நீரையும், காற்றையும் துய்ப்பதாலும் அமையும். இதைத் தடுப்பதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் இணையற்ற, பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத மருந்துகள் உள. அந்த நோய்களின் வாய்நாடி வாய்ப்பச் செயல் புரிய வேண்டும்.
'

தடுப்பூசி சரியா?

உயிருள்ள அம்மைக்கிருமியை இவ்வகையில் உடலில் ஏற்றுவதனால் பல நோய்கள் விளையக்கூடும். அதற்கு ஆட்பட்டவனுடைய உடற்கூறே கெடும் என்று பல நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கம் இன்று வரை மாறவே இல்லை. அம்மை தடுப்பூசி குத்துவதினால் ஏற்படும் பின்விளைவுகள் பல… அதற்குப் பிறகு அவன் குணமடைவதே இல்லை.
இந்த தடுப்பூசியினால் அம்மை நோயை அழித்து விட்டோம் என்று மார்தட்டுகிறார்கள். ஆனால் இந்த நோய் மாற்றுருவம் கொண்டு புற்றுநோயாக வெளிப்படுகிறது என்று என் ஆசான் மருத்துவர் சேஷாச்சாரி பல மருத்துவ ஏடுகளில் ஆதாரபூர்வமாக எழுதினார்.
'
அம்மை
உதாரணமாக, அண்டை வீட்டின் ஒரு குழந்தைக்கு சின்னம்மை கண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நோய் பிற இல்லங்களுக்கும் பரவாமல் தடுப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அவை முறையே ஆண்டிமோனியம் க்ரூடம், ( ANTIMONIUM CRUDUM) பல்ஸட்டிலா, ( PULSATILLA) மெர்க்யூரியஸ்,(MERCURIUS ) ரஸ்டாக்ஸ் ( RHUS TOX) ஆகியவையாகும்.
இவற்றினுள் உடனடியாக நிவாரணம் தரக்கூடியது எது என்று ஒரு மருத்துவன் தனது அனுபவத்தின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெரும்பாலான நேரங்களில் ஆண்டிமோனியம் க்ரூடம் எனக்கு நல்ல பயனை அளித்திருக்கிறது. ஆண்டமனி என்ற கனிமத்தைப் பொடித்து நீர்த்து, வீரியமூட்டி இது தயாரிக்கப்படுகிறது. சாதாரணமாக முப்பதாவது வீரியமே போதும். தேவைப்பட்டால் சைலீஷியா (SILICEA) என்ற தொடர் மருந்தையும் நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைக்குத் தரலாம். அது வியாதியின் கடுமையைக் குறைக்கும்.
'
வாந்தி பேதி - திருவிழாக் காலங்களில் சுற்றுப் புறத்தின் தூய்மை குறைகிறது. அதன் விளைவாக வாந்திபேதி பரவுவது வழக்கம். இது எளிதில் பிறரையும் தொற்றிக் கொள்ளும். இதற்கு மிகச் சிறந்த மருந் காம்ஃபரா ( CAMPHORA). இது கற்பூரத்திலிருந்து வீரியப்படுத்தப்பட்டது. நமது ஆலயங்களில் கற்பூர ஒளி காட்டுவதும், நீரில் கற்பூரத்தைக் கரைத்துப் பிரசாதமாக வழங்குவதும், வாந்தி, பேதி பரவக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தான். இன்னொரு மருந்து குப்ரம் (CUPRUM MET) செம்பு, செம்பினாலான நாய்க்காசு, தாயத்து, கட்டைக் காப்பு ஆகியவற்றை அணிந்தாலும் போதுமானது. உடலில் செம்புபடுவதனால் காலரா தடுப்பு மட்டுமல்ல, காக்கை வலிப்பு நோயையும் அது குணப்படுத்துகிறது என்பது எனது அனுபவம். மாவாகத் தின்றாலும், பணியாரமாகும் ஒரு விந்தையை மருத்துவத்துறையில் கண்டிருக்கிறேன்.
'
தாளம்மை - சாதாரணமாக நாம் காண்பது பொன்னுக்கு வீங்கி என்ற கண்ட அழற்சி (mumps) தாடையில் ஒரு புறம் வீங்கி விடும். சளி, கடும் காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவை ஏற்படும். வெகு விரைவில் பரவித் தொல்லை கொடுக்கும் நோய்களில் இதுவும் ஒன்று. அப்போதெல்லாம் குழந்தைக்கு ஒரு பொன் சங்கிலியை அணிவிப்பார்கள். தங்கள் விற்கும் விலையில் நாம் எத்தனை குழந்தைகளுக்குப் பொற் சங்கலியைத் தர முடியும்?
தங்கத்தையை உரைத்து வீரியப்படுத்திய ஆரம்மெட்டாலிக்கம் (aurum met) என்ற ஹோமியோபதி மருந்து முப்பதாவது ஆற்றலிலேயே சிறந்த தடுப்பு மருந்தாக விளங்கும். ஆரம் என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு தங்கம் என்பதுதான் பொருள். பிலோகாரபைன் ( pilocarbine), மெர்க்யூரியஸ், (mercurius) பாராடோடினம் (parotidinum) ஆகிய மருந்துகளும் சிறந்த பயன் தருவதைக் கண்டிருக்கிறேன். தடுப்பு மருந்துகளைத் தேர்ந்தெடுக்கும்போது நோயாளிகளின் மன, உடல் இயல்புகளைக் கருத்தில் கொள்வது விரைவில் நிவாரணமளிக்க உதவி செய்யும்.
'
கக்குவான் இருமல் - கக்குவான் இருமல் ( whooping cough) என்பது ஒரு கொடிய நோய். இது குழந்தையை உருமாற்றிக் குலைத்து விடும். அதுபடும் துயரத்தைக் கண்டு பரிதாபப்பட வேண்டிய நிலைமை தோன்றும். குழந்தை இருமி, இருமி உண்டதை எல்லாம் வாந்தி எடுத்துவிடும்.
எந்த இருமலுக்குமே ட்ரொசேரா (drosera) நல்ல மருந்து. ஆறாவது வீரியமே போதும். இது ஒரு செடியின் சாறு, தொடர்ந்து கொரேலியம் ( corollium rubrum) என்ற நற்பவளமும் பெர்ட்டூசின் (pertussin) என்ற நோய்க் கழிவுப் பொருளும் நல்ல ஔடதங்களாக அமையும். இவை அனைத்துமே முப்பதாவது வீரியத்தில் பயன்தரக் கூடியவை. கக்குவான் இருமலை இந்த மூன்று மருந்துகளின் துணை கொண்டே குணப்படுத்திவிடுவது சாத்தியம். வராமலும் தடுக்கலாம்.
'
முறைக்காய்ச்சல் - மலேரியாவைப் போன்ற முறைக்காய்ச்சல்களுக்கு சில நல்ல தடுப்பு மருந்துகள் ஹோமியோபதி முறையில் உள்ளன. காய்ச்சலின்போது குளிர் இருக்குமானால் நக்ஸ்வாமிகா ( nux vomica) காலை ஒன்பது மணிக்கு ஜுரம் வருவதானால் நாட்ரம் ம்யூர் ( natrum mur) நடுப்பகல் அல்லது நள்ளிரவானால் ஆர்சனிக்கம் ஆல்பம்,[arsenicum album] பதினோரு மணிக்கென்றால் கந்தகம் (sulphur) ஒரு கவனமுள்ள மருத்துவன் நோய் தோன்றும், மிகுதியாகும் அல்லது தணியும் நேரத்தையும் முறைக்காய்ச்சல் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
'
சொறி, சிரங்கு - ஒரு குழந்தையின் பெற்றோர்களுக்குத் தோல் சம்பந்தமான நோய் அல்லது குழந்தையை உண்டாகியிருக்கும் தாய் பல வகை மருந்துகளை உட்கொண்டுடிருந்தாலோ, அதற்குக் கந்தகம் (sulphur) என்ற நிவாரணியின் ஒரு சிற்றுருண்டையே போதுமானது என்பது மேதைகளின் அனுபவக் கணிப்பு. குழந்தை பிறந்த ஓரிரண்டு வாரங்களுக்குள் அந்தக் கந்தகக் கரைசலின் ஒரு சொட்டு குழந்தைக்குக் கொடுக்கப்படுமானால், அது எந்தத் தோல் வியாதியிலிருந்தும் பாதுகாக்கப்படும் என்று மருத்துவ மேதை லிப்பே குறிப்பிடுகிறார்.
 '
வெப்பத் தாக்குதல் (sunstroke)- நமது நாடு வெப்பம் மிகுந்தது. சூரிய உஷ்ணத்தில் அலைந்து பணிபுரிய வேண்டிய கட்டாயம் பலருக்கு இருக்கிறது. சூரிய ஒளி உடலுக்கு நன்மை தருவதானாலும், அதன் வெப்பம் பலருக்கு நோயை விளைவிக்கக்கூடும். முகம் சிவந்து, தலைசுற்றி, நாவரண்ட நிலை பெரும்பாலோருக்கு ஏற்படும் அப்போதெல்லாம் க்ளோனைன் அல்லது பெல்லடோனா உடனடியாக பலனைத் தரும். சிறப்பாக, நெருப்பினடியில் பணிபுரியும் நிர்ப்பந்தமுடைய கருமான் போன்ற கைவினைஞர்களுக்கு இந்த மருந்து தடுப்பாகவும், நிவாரணியாகவும் பயனளிப்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
அடுப்படியில் நெடுநேரம் பணிபுரியும் சமையர்காரர் ஒருவருக்கு நீர்க்கடுப்பு வந்தது. சிறு நீரிலும் உதிரம் கலந்திருந்தது. அவர் ஓடோடி வந்தார். தொழில் முறையில் அவருக்கிருந்த நிர்ப்பந்தத்தை உணர்ந்து அவரை ஓய்வெடுத்துக் கொள்ளும்படி செய்தேன். ஒரே வேளை மருந்து க்ளோனைன் அவரைக் குணப்படுத்தி விட்டது. இதை நைட்ரோ கிளிசரின் என்றும் சொல்வார்கள். க்ளிசரின், ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகியவைகளின் கலப்பு இது. வெய்யிலில் அலைந்து பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தமுடையவர்களுக்கு க்ளோனைன் ஒரு சிறந்த தடுப்பு மருந்து என்பது எனது அனுபவம்.
'
ஹோமியோபதித் தத்துவத்தின் தந்தை எனப்படும் டாக்டர் ஹானிமன் ஆர்கனான் என்ற தமது நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடுகிறார்.
 மருத்துவரின் தலையாய ஒரே கடமை நோயாளியைக் குணப்படுத்துவதாகும். இதை விரைவாக, பக்க விளைவுகள் ஏற்படுத்தாமல், நிரந்தரமான பலன் தரும் வகையில் செய்தல் வேண்டும்.
இந்தப் பணியைச் செம்மையாகப் புரிவதற்கு அவன் நோயாளியின் குறிகள், அதற்கேற்ற மருந்து, அதைத் தர வேண்டிய நேரம் அனைத்தையும் சீர்தூக்கி செயல்படுதல் வேண்டும். இதோ நமது தமிழ்மறை பேசுகிறது.
'
உற்றான் அளவும், பிணியளவும், காலமும்
கற்றான் கருதிச் செயல்

தெய்வ வள்ளுவன் சமுதாயப் பிணிகளுக்கு மட்டுமல்ல, உடலைத் துன்புறுத்தும் நோய்களுக்கும் உற்ற மருத்துவராக விளங்குகிறார் என்ற பேருண்மையை வலியுறுத்த வாய்ப்பளித்த நல்லோர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து
***************************************************************
அற்புதங்கள் தொடரும்
********************************************************

Monday, 6 March 2017

ஹோமியோபதி மருத்துவம் ஓர் அறிமுகம் மற்றும் அதன் அறிவியல் பின்புலம், தயாரிப்புமுறை,என்னென்ன மருந்துகள் மற்றும் இந்தியாவில் அதன் நிலை மற்றும் சிறப்பு

மேஜர் தி.சா.இராஜூ



ஹோமியோபதி என்றால் என்ன?
இப்படி ஒரு கேள்வி கேட்பவரின் உதட்டோரத்தில் தோன்றும் ஏளனப் புன்னகையைச் சக மருத்துவர்கள் பொருட்படுத்தக் கூடாது. குறைபாடு நமது மருத்துவர்களிடமே உள்ளது. மருத்துவர்களுக்கு மூல நூலைப் பற்றிய அறிவு குறைவு. அவர்களுடைய இன்றைய அணுகுமுறையும் பெருமை சேர்ப்பதாக இல்லை.
'

பலமுறைகள்

ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி முறை, அக்யூபஞ்சர் என்ற சீன வைத்தியம், அல்லோபதி என்ற ஆங்கில மருத்துவம் அனைத்துமே உயிர்க்குலத்தின் துயர்துடைக்கவே ஏற்பட்டவை. எதிலுமே ஏமாற்று இல்லை.
.

தனிமுறை

ஆனால் ஹோமியோபதி மருத்துவம் மற்றவைகளிலிருந்து மாறுபட்டது. அதை உணர்ந்து கொண்டால் மட்டுமே, மற்ற துறைகளை இத்துடன் குழப்புவது தவறு என்பது புரியும். இதை அறிமுகப்படுத்தியவர் ஃப்ரெடரிக் கிறிஸ்டியன் ஸாமுவேல் ஹானிமான். இவர் ஜெர்மனி நாட்டில் உள்ள மீஸன் நகரத்தில் பிறந்தவர். அல்லோபதி மருத்துவத்தில முதுகலைப் பட்டம் பெற்றவர். ஒரு பன்மொழிப் புலவர். பிற மேதைகளின் நூற்களைத் தமது மொழியில் பெயர்ப்பதையே வாழ்முறையாகக் கொண்டிருந்தவர்.
இரண்டு கருத்துக்களை இவர் ஆராய்ச்சி மூலம் தெளிந்தவர். முதலாவது, ஒரு பொருளை அதிக அளவில் உட்கொள்வதனால், ஏற்படும் துயரங்களை வீரியப்படுத்தப்பட்ட அதே பொருள் நீக்கிவிடும். அடுத்தது ஒரு பொருளை நீர்ப்பதனாலும், கடைவதனாலும், அதன் மருத்துவ வீரியம் அதிகமாகிறது. இந்த இரண்டு அடிப்படைக் கருத்துகளுமே ஆயுர்வேதத்தில் உள்ளவை. (நஞ்சேதான் நஞ்சுக்கு மருந்து). மர்த்தனம் குண வர்த்தனம்). ஆயுர்வேத மருத்துவர்கள் தொடர்ந்து இத்துறையில் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதே உண்மை.

.
நஞ்சும் மருந்தும்

ஹானிமன் வசித்த இல்லத்தைச் சுற்றி ஏராளமான சிங்கோனா மரங்கள் இருந்தன. அவரும் அவருடைய குடும்பத்தாரும் நோய்வாய்ப்பட்டனர். அந்த மரப்பட்டையைப் பொடித்துக் கிழாயமாக்கி நீர்த்துக் கொடுத்ததில அவர்களுடைய சுகவீனம் மறைந்து போயிற்று.
.
வீரியப்படுத்துதல் என்பது அதை நீர்ப்பதும், கடைவதுமாகும். இதை அவருடைய சமகாலத்து மருத்துவர்களே ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இந்தக் கொள்கைகளை மெய்ப்பிக்க அவர் பெரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
.

ஏற்பு

இந்தக் கொள்கைகளை ஏற்காத சகமருத்துவர்கள் அவரை மீஸன் நகரை விட்டே விரட்டிவிட்டனர். ஹானிமன் ஃப்ரான்ஸ் நாட்டில் குடியேறி அதன் தலைநகரிலேயே இந்தப் பணியைத் துவங்கினார். அந்த நாட்டின் மருத்துவ நிபுணர்கள் அவரது பெருமையை உணர்ந்தனர். அவர் பெரும் புகழும், செல்வமும் ஈட்டினர். இன்ற அந்த நாட்டில் முப்பத்தேழு விழுக்காடு மக்கள் இந்த முறை மருத்துவத்தின் மூலம் பயனடைகிறார்கள்.
.

ஆதிவேதம்

தமது முறையை விளக்க அவர் ஆர்கனான் என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு இவர் ஆறு பதிப்புகள் கொண்டு வந்தார். முன் கூறிய கருத்துகளில் குறைபாடு இருந்தால் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார். இந்த நூல்தான் ஹோமியோபதி மருத்துவத்தின் ஆதிவேதம். இதைத் தவிரவும் அவர் பல நூல்கள் எழுதி வழங்கினார். எண்பத்து எட்டாம் வயதில் இயற்கை எய்தினார்.
.

உடலே ஆய்வுக்களம்

இவருடைய முறையின் சிறப்பு ஒவ்வொரு மருந்தைiயும் அவர் தாமே உட்கொண்டு மெய்ப்பித்து எழுதியதுதான். இருநூறு மருந்துகளை அவர் இந்த வகையில் மெய்ப்பித்து வரைந்திருக்கிறார்.
.
இவரைப் பின்தொடர்ந்து பல மருத்துவ மேதைகள் இந்த முறையைப் பின்பற்றினார்கள். தங்களது அனுபவங்களை எழுதி வைத்தனர். இவர்களின் முக்கியமானவர்கள் லிப்பே, ஜேம்ஸ்டெய்லர் கெண்ட், ஆலன், ஹெரிங், நாஷ், போய்னிங் ஹாஸன், ஃபாரிங்டன் ஆகியோர். எல்லாப் பெயர்களையும் இங்கு குறிப்பிடவில்லை. விரிவஞ்சி விடுகிறேன். இவர்கள் அனைவருமே அலோபதி மருத்துவ நிபுணர்கள்.அந்த மருத்துவ முறையை விட இது மேலானது என்பதைத் கண்டுணர்ந்தார்கள். தமது அனுபவங்களை உலகிற்கு எடுத்துரைத்துப் பெருந்தொண்டு புரிந்தவர்கள்.
.

சிறப்பு

இந்த முறையின் இரண்டு சிறப்புகளை எடுத்துக் கூறுவது பொறுத்தமாக இருக்கும். ஒன்று, இந்த மருந்துகள் பக்க விளைவுகளை உண்டாக்காது. அடுத்து இதை விட மலிவான மருத்துவம் உலகிலேயே கிடையாது. ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும், சிறந்த முறைகள் ஐயமில்லை. ஆனால், இந்த மருந்துகளின் விலை எளிய மக்கள் அணுக முடியாமல் உள்ளது.
ஒரு காலத்தில் அற்புதம் விளைவிப்பவை என்று கருதப்பட்ட பல அலோபதி மருந்துகளை அந்த மருத்துவர்களே இன்று பயன்படுத்த அஞ்சுகின்றனர்.
.

மருந்து மூலம்

இந்த மருந்துகளின் மூலப் பொருட்கள் யாவை? அது ஒரு முக்கியமான தகவல்.
.

தாவரம்

முசுமுசுக்கை, வல்லாரை, நாகதாளி, கீழாநெல்லி, எட்டிக்காய், வேம்பு, காற்றுமலர், வெள்ளரிக்காய், கற்றாழை, எருக்கு ஆகியவை சில.
.

கனிமம்

பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, பாதரசம், பாஸ்வரம், கோந்துகள், கந்தகம், சமையல் உப்பு, சுண்ணாம்பு முதலியவை.
.

விலங்கு

பலவகைப் பாம்பு, சுள்ளெறும்பு, சிலந்தி, நாய்ப்பால், கரப்பான்பூச்சி ஆகியன.
.

நோய்க் கழிவுப் பொருள்

சீழ், சிறங்குப் பொறுக்கு, வெட்டை ஒழுக்கு. நெஞ்சுச் சளி, நோயுள்ள நுரையீரல் இவை சில எடுத்துக்காட்டுகள்.
.

தயாரிப்பு முறை

இந்த மூலப் பெருள்களைக் கடைந்து, பொடித்து, உறைத்து இவற்றின் ஆதித்திரவத்தை (இதைத் தாய்த் திரவம் என்று அழைப்பார்கள்) பிறகு சுத்தமான உண்சாராயத்துடன் கலந்து வைப்பார்கள். இவற்றை ஏற்ற முறையில் வீரியப்படுத்துவார்கள். இவை முறையே மூன்று, ஆறு, பன்னிரண்டு, முப்பது, இருநூறு ஆகிய வீரியங்களில் தயாரிக்கப் பெறும். இந்தத் திரவத்தில் பால்சீனி உருண்டைகளை முக்கி எடுத்துப் பின் பாட்டிலில் அடைத்து வைப்பர். சீராகப் பாதுகாக்கப்பட்டால் இவை பல ஆண்டுகளுக்குக் கெடாமல் இருக்கும். இந்த முறையில் எல்லா மருந்துகளும், ஒரே மாதிரி இருக்கும், மாத்திரைகளில் பல அளவுகள் உள்ளன. முப்பதாவது அளவில் உள்ள இரு மாத்திரைகள் மட்டுமே ஒருவேளை மருந்தாக அமையும்.
.

இடம்-வலம்

இந்த முறையின் மற்றொரு தன்மை, இவை சிறப்பாக உடலின் வலது, இடது புறங்களில் தீவிரமாகவேலை செய்யும். எடுத்துக்காட்டாக எட்டிக்காய் வலதுபக்க மருந்து. கந்தகமும், பாதரசமும் வலது பக்க நிவாரணிகள். மெக்னீஷியம், தூஜா லாக்கஸிஸ் ஆகியவை இடது பக்கத்தில் சிறப்பாகப் பணிபுரியும். மற்றப் பகுதிகளில் பலன் இராது என்பதன்று. அன்றியும் எந்தப் பக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தால் மருந்தைத் தேர்ந்தெடுப்பது எளிது.
.
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகியவற்றிலும், அலோபதி முறையிலும் இல்லாத சிறப்புத் தன்மை, இந்த இடம் வலம் என்பதாகும். இது குறித்துப் பல நிபுணர்களிடம் விவரம் கேட்டேன்.அவர்கள் கூறிய விளக்கம் நினைவில் வைக்கத்தக்கது.
.
எலி, தவளை, குரங்கு ஆகிய விலங்குகளுக்கு, மருந்துகளைக் கொடுத்து அதன் விளைவைக் கண்டறிவது மற்ற மருத்துவ முறைகள். ஆனால் ஹோமியோபதி முறையில் மட்டும்தான் ஆரோக்கிய நிலையிலுள்ள ஆண், பெண் ஆகியோருக்கு இந்த மருந்துப் பொருட்களைக் கொடுத்து, அதன் விளைவுகளைக் கேட்டறிந்திருக்கிறார்கள். விலங்குகளால் இதைத் தெரிவிக்க இயலாதே.
.
இந்த மருத்துவத்தின் மிகப் பெரும் சிறப்பு இது.
இன்னும் பலருக்கு முதியோருக்கு, பூப்படையும் நிலையிலுள்ள பெண்களுக்கு என்று பல மருந்துகள் உள. பேறுகாலத்திற்குப் பின்பு உதிர விரையத்தின் விளைவு, உடலின் நீர்ச்சத்தின் செயல்பாடு, ஆகியவைகளுக்குமான அற்புதமான நிவாரணம் இந்த முறையில உள்ளன.
.
இதன் இன்னொரு சிறப்புப் பணிபுரியும் கால அளவு, சில மூன்று நாட்கள், ஏழு நாட்கள், முப்பது, அறுபது நாட்கள் வரை செயல்படும்.
.

நேரம்

ஒரு நோயாளியின் துயரம் எந்த நேரத்தில் அதிகமாகிறது. அல்லது தணிகிறது. என்பதும் ஒரு சிறப்பான குறி. காலை ஒன்பது மணிக்கு நோய் மிகுந்தால் அதற்கு மருந்து சமையல் உப்பு, நன்பகல் நள்ளிரவு ஆகியவற்றிற்கு தெள்ளுபாஷாணம் (ஆர்ஸனிக்கம்) மாலை நான்கு மணிக்கு என்றால் லைக்கோபோடியம், இதற்கான தனி அட்டவணை ஒன்றே தயாரிக்கப்பட்டுள்ளது. நோய் இரவு நேரத்தில் மிகுமானால், அப்போது கந்தகத்தையும், பாதரசத்தையும் குறித்து எண்ண வேண்டும்.
.
ஒவ்வொரு மருந்திற்கும் தொடர் மருந்தும், எதிரி மருந்தும் உள. மருத்துவர் ஜே.ஹெச்.கிளார்க், கிப்ஸன், மில்லர் ஆகியோர் இதன் பொருட்டுத் தனி நூல்களே எழுதியிருக்கிறார்கள். அதைப் படித்து அறிந்து கொள்வது மருத்துவரின் கடமை.
.

தவிர்க்க வேண்டியவை

ஹோமியோபதி மருந்துகள் உண்ணும்போது காபி, தேயிலை, புகையிலை ஆகியவற்றை விலக்க வேண்டும். இந்த மூன்றிலும் ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. எனது ஆசான் இவைகளைத் தவிர்ப்பவர்களுக்கு மட்டுமே மருந்து தருவார். நானும் அவர் வழியையே பின்பற்றுகிறேன்.
.

யார்-எவர்? 

இந்திய நாட்டில் கொடி கட்டிப் பறந்த ஹோமியோபதி மருத்துவர்கள் அனைவருமே அல்லோபதி மருத்துவர்கள். அவர்களில் சரோஜினி தேவியின் மகன் ஜெயசூர்யா மேற்படிப்பிற்காக, ஜெர்மனி சென்றார். அங்கு ஹோமியோபதி பட்டம் பெற்று வந்தார். ஹைதராபாத்தில் அவர் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். இன்று அவருடைய பெயரில் ஒரு மருத்துவக் கல்லூரியே இயங்குகிறது.
திருச்சி மைய மருத்துவமனையின் தலைவராக இருந்த உமாபதி முதலியார் ஹோமியோபதி மருத்துவம் பார்த்ததற்காக. பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னால் அவரை அழைத்துக் கௌரவித்தார்கள்.
மும்பையிலிருந்து செயல்பட்ட பாபுராவ் படேலை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். இவர் சிறந்த இலக்கியவாதியும்கூட. ஹோமியோபதித் துறையில் பெரும் புகழும் செல்வமும் ஈட்டினார்.
திருவிடைமருதூர் ராமமூர்த்தி இந்தத் துறையில் சிறப்பாகப் பணியாற்றினார். மருந்துகள் தயாரித்ததுடன், பல மருத்துவர்களையும் உருவாக்கினார். கடினமான உழைப்பாளி, நல்ல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
.

கோள்நிலை

சூரிய, சந்திரர்களின் போக்கு மனிதர்களைப் பாதிக்கும் என்ற தத்துவத்தையும், இந்த மருத்துவமுறை ஏற்றுக் கொள்கிறது. உடலின் எந்தப் பகுதியில் கட்டிகள் தோன்றினாலும் அவற்றை நீக்க தேய்பிறையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகியவையும் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
.
எங்கள் ஆசானைப் பற்றிக் குறிப்பிடாமல் இது முழுமை பெறாது. அவர் ஹைதராபாத் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர். அந்த மன்னரிடம் பொற் பட்டயம் பெற்றவர். ஆழ்ந்த புலமையும், நினைவாற்ற்லும் மிக்கவர். மருத்துவப் புத்தகத்தின் பக்கம் வரி ஆகியவைகளைக்கூட அவர் நினைவில் பதிய வைத்திருந்தார். பெயர் திரு. சேஷாச்சாரி.
நோயாளியின் குறிப்பைத் தயாரித்து முடித்ததும் எதற்கும் ஐயர் என்ன சொல்லுகிறார் என்று பார்த்துவிடு என்று பரிவுரை செய்வார். மாயூரத்தைச் சேர்ந்த திரு. டி .சுப்ரமணிய ஐயர் மைய அரசின் கணக்காய்வுப் பிரிவின் உயர் பதவி வகித்தவர். புகழ் பெற்ற விஞ்ஞானி ஸர்.சி.வி.இராமன் இவரிடம் மருத்துவ உதவி வேண்டி வருவார். இவர் எழுதியது ஒரே நூல்தான். ஆனால் அது ஹோமியோபதி மருத்துவத்தின் சாரம் முழுவதையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்த நூலுக்குக் கர்னல் ரமணராவ் என்ற மருத்துவப் படைவீரர் முன்னுரை அளித்துக் புகழாரம் சூட்டியுள்ளார்.
.

சிறப்பு அதிகாரம்

இறுதியாகச் சில சொற்கள். நமது வள்ளுவம் எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கியது. இதில் இல்லாத எப்பொருளும் இல்லை. நாயனார், மருந்து என்ற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்கள் வரைந்துள்ளார். அடிப்படை ஆயுர்வேதம்தான் என்றாலும் இவற்றை எல்லா மருத்துவர்களும் படித்துக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும். இந்தப் பாக்களை நமது மருத்துவமனையின் சுவர்களில் எல்லாம் பெரிய எழுத்தில் வரைந்து வைக்க வேண்டும் இவற்றைப் படிகிகும்போது, ஒரு தமிழன் இப்படி எல்லாத் துறைகளிலும் ஒப்புயர்வற்றுப் பணிபுரிந்தானே என்று நாமெல்லாம் பெருமைப்படலாம்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு
.
‘நோய் நாடி, அதன் முதல் நாடி, அது தணிக்கும்`
வாய் வாடி வாய்ப்பச் செயல்’
.
இதுதான் ஹோமியோபதி.அதனால் தான் மற்ற முறை மருத்துவர்களைப் போல் சகட்டுமேனிக்கு மருந்தை அளிக்காமல், நோயாளிகளை ஆராய்ந்து ஹோமியோபதி மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். சரகர், ஸுஸ்ருதர், ஜீவகன் ஆகிய பெரியோர்களும் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள்.
தற்போது இந்த அறிமுகம்போதுமே
ஒரு மருந்தை அதிக அளவில் உட்கொண்டு, அதன் விளைவால், மனித உடலில் என்ன மாறுதல் நிகழ்கிறது என்று ஆராய்வது ‘மெய்ப்பித்தல்’ ( PROVING) எனப்படும்.
இதை முதன் முதலில் சாதித்தவர் சாமுவேல் ஹானிமன் (1755-1803) இரு நூற்றுக்கும் அதிகமான பொருள்களைத் தாமே உட்கொண்டு, அதன் விளைவு குறித்து எழுதி வைத்தவர் இந்த மேதை. அந்த விளைவுகளை அதே மருந்தின் மிகக் குறைந்த அளவு போக்கிவிடும் என்ற தத்துவம் தான் ஹோமியோபதி.
.
‘எயிட்ஸ்’ என்பதே ஒரு மாயை. அப்படி ஒரு சுகவீனம் இருப்பதாகப் பறையறிவிப்பது மனித குலத்திற்குச் செய்யும் மிகப் பெரிய தீங்கு என்பதே ஹோமியோபதி நிபுணர்களின் முடிவு.
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ளத்யேந்தல் என்ற சிற்றூரில் டாக்டர் ஆண்டிரியாஸ் ஒவ்வொரு நாளும் 264 நோயாளிகளுக்கு மருந்தளிக்கிறார். அங்கு கூட்டம் அலை புரளுகிறது. அவர் ஜெர்மனியிலிருந்து இந்தியாவிற்கு வந்து தொண்டு புரியும் அருமனிதர். எயிட்ஸ் நோயாளிகள் எவராவது உங்களிடம் வந்தால் அவரை என்னிடம் அனுப்பி வைக்கலாம். அவர் சீராகி விடுவார் என்று அறைகூவல் விடுத்தேன். (காண்க ‘ஹெல்த்’ பிப்ரவரி 1996 இதழ்) அவரும் ஏற்றுக் கொண்டார்.
இப்போது வரத்தொடங்கியுள்ளார்கள்.
'
'
***
ஹோமியோபதி அற்புதங்கள்
புத்தகத்திலிருந்து
***********
மேஜர் தி.சா.இராஜூவின் அற்புதங்கள் தொடரும்............

ஹோமியோபதி அற்புதங்கள் மேஜர் தி.சா.இராஜூ



"ஹோமியோபதி என்றால் என்ன? "
இப்படி ஒரு கேள்வி கூடவே ஒரு ஏளனமான புன்சிரிப்பு. இப்படிக் கேட்பவர் கல்வி பெற்றவர் சமுதாய நடைமுறைகளை அறிந்தவர்.
'
எவரும் யுனானி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், அலோபதி ஆகிய முறைகளைப் பற்றி இவ்வாறு கேட்பதில்லை. ஏனென்றால், அந்த முறையாளர்கள் சீறுவார்கள். ஊருக்கு இளைத்தவர் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று ஒரு பழமொழி உண்டு. இன்று ஏளனத்துக்கு இலக்காகிறவர் ஹோமியோபதி மருத்துவர் மட்டுமே.
'
"உங்களுடைய படி வருமானம் என்ன?"
ஹோமியோபதி மருத்துவர் தம்மிடம் சிகிச்சை பெற வந்துள்ளவரிடம் இவ்வாறு கேட்கிறார். இது நோய்க்கு தொடர்பில்லாத கேள்வி என்ற பொருளில் கேலி செய்றது கல்கியில் வெளிவந்தள்ள கட்டுரை.
'
நோயாளியின் பொருளாதார நிலை என்ன? அவருக்கு அந்தத் துறையில் சிக்கல்கள் உள்ளனவா? அதனால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறதா? அதன் விளைவாக நோய் தோன்றி இருக்கிறதா என்று மருத்துவர் அறிய விரும்புகிறார். பொருளிழப்பினால் மனநிலை பாதிக்கப்பட்டு அதன் காரணமாக நோய் தோன்றக்கூடும். அதற்கு மருந்து ஹோமியோபதித் துறையில் உண்டு என்ற உண்மை மரமண்டைகளுக்குத் தெரியாதுதான். (நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?)
'
இதுவரை ஹோமியோபதி மருத்துவமுறை பற்றி ஐந்து புத்தகங்கள் எழுதிவிட்டேன். அவற்றில் சில மறுமுறையும் பதிக்கப்படுகின்றன. இவற்றை எழுதுவதற்காகத்தான் பல துறை மருத்துவ நூல்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால இவ்வளவையும் படித்த பிறகு வள்ளுவரை ஒத்த ஒரு மருத்துவ மேதையை என்னால் காண முடியவில்லை. பொருட்பாலில் மருந்து என்ற அடிகளில் உள்ள பத்து குறட்பாக்களுள் அற்புதமான பொருட்பாடல்கள்.
'
நோய் நாடி அதன் முதல் நாடி - அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்.
என்றொரு அமுதவாக்கு. 
'
உண்மையாய் தொழில் புரியும் ஹோமியோபதி மருத்துவர் ஒரு நாளைக்கு இருபது நோயாளிகளுக்கு அதிகமாகச் சிகிச்சை அளிக்க இயலாது. 
அதற்குக் காரணம் ஒவ்வொரு நோயாளியும் ஒரு தனி குணச்சித்திரம். ஒரே வீட்டில் மூன்று குழந்தைகள். அவற்றின் நோய்க்குறிகள் ஒரே வகையானவை. ஆனால் மூவருக்கும் வெவ்வேறு மருந்துகள் தர வேண்டியிருந்தது என்று எழுதுகிறார் மருத்துவமேதை நாஷ். சகட்டுமேனிக்கு மருந்து என்ற செய்தியே இந்த மருத்துவ முறையில் கிடையாது.
'
ஆர்னிகா மாண்டென்னா என்ற ஒர் அற்புதமான மருந்து மேதை ஹானிமனால் மெய்ப்பிக்கப்பட்டது. அது பல முறை நிவாரணி. அந்த மருந்து முடிவளர்வதற்கு உதவும் என்று அவர் எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் மட்டுமன்று அவருக்குப் பின் வந்த நிபுணர்கள் எவரும் இவ்வாறு கூறவில்லை. ஆனால் நடைமுறை வாழ்வில் என்ன நிகழ்கிறது? பல மருத்துவ நிறுவனங்கள் ஆர்னிகேட்டட் கூந்தல் தைலத்தைக் குறித்து விளம்பரம் செய்கினிறன. விற்பனையும் செய்கிறார்கள்.
எனது இரண்டாவது நூலை குடந்தையிலுள்ள ஒரு மருத்துவ நிறுவனம் வெளியிட்டது. அதில் ஆர்னிகாவைப் பற்றி விளக்கும்போது எல்லாத் துறையிலும் நடக்கும் மோசடிகள் ஹோமியோபதியிலும் புகுந்துவிட்டன. அதற்கு இந்த ஆர்னிகா தைலம் எடுத்துக்காட்டு என்று எழுதியுள்ளேன்.
புத்தகம் வெளியான பிறகு நிறுவன மேலாளர் என்னைக் கேட்டார். ‘நாங்களே இந்த முறையில் விற்பனை செய்கிறோம்.. நீங்கள் இப்படி எழுதிவிட்டீர்களே..’
'
என்னுடைய மறுமொழி
‘நான் உண்மையைக் கூற என்றும் தயங்குவதில்லை’ ஆனால் உண்மை யாருக்கு வேண்டும்?
பல கனிமங்களைக் குறிப்பிட்ட அளவில் கலந்து மேதைகள் மெய்ப்பித்திருக்கிறார்கள். அவைகளைக் குறியினுக்கேற்பத் தருவது நேர்மையான மருத்துவம். 
ஆனால் இன்று நடப்பது என்ன?
ஒவ்வொரு வகை நோய்க்கும் ஒரு கூட்டு மருந்து. இது மெய்ப்பிக்கப்பட்டதா? சத்தியமாக ஆதாரம் இல்லை. 
அந்த நாளில் ஒரு திரைப்பட பாடல் உண்டு.
'
தலைவலிக்கொரு மாத்திரை தடுமனுக்கொரு மாத்திரை, சாப்பாட்டுக்கு முன்னாலே, சாப்பாட்டுக்கு பின்னாலே..
'
இது அலோபதி மருந்துகளை ஏளனம் செய்த புகழ்பெற்ற பாடல். அந்த நிலைக்குத் நாமும் தள்ளப்பட்டுவிட்டோமே? இது நியாயமா? தருமந்தானா?
'
என்னிடம் ஒர் இஸ்லாமிய அன்பர் வந்தார்.
‘என் மனைவிக்கு நெடுநாளாக இருமல், சளி, இழுப்பு அதற்கு மருந்து வேண்டும்’
'
நோயாளியை ஒரு முறை நேரில் பார்த்து விவரங்களைப் பதிவு செய்தபிறகே என்னால் உதவ முடியும் - எனது மறுமொழி.
'
மறுநாள் தமது மனைவியுடன் வருகிறார். அந்த மங்கையை உடல்நிலை குறித்துக் கேள்வி கேட்டேன். அவளால் பதில் சொல்லவே இயலவில்லை. துண்டு துண்டாக வார்த்தைகள். அதுவும் விளங்காத உளறல்.
'
‘இப்படி எவ்வளவு நாளாக இருக்கிறது?’
'
‘சிறுபிள்ளையிலிருந்தே.’
'
‘என்ன காரணம்?’
'
‘வாய் பேச முடியாத தோழி இவளுக்கு உண்டு. அவளுடன் பழகியதால் இந்த நிலை’.
'
என்னால் இதை ஏற்க முடியவில்லை. வாய் பேசாதவர்கள் என்று எவரும் கிடையாது. செவி கேளாததனால்தான் நாவு இயங்க்hமல் போனது. இவரை காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் காட்டி மருந்து கொடுத்தோம். பலன் இல்லை. கணவர் தெரிவித்தார்.
'
ஹோமியோபதியில் சிறுவயதிலிருந்தே பேச்சில் குறைபாடுடன் உள்ளவர்களுக்கென்று ஒரு மருந்து உண்டு. அதை மூன்றாவது வீரியத்துடன் நான்கு பொட்டலங்கள் கொடுத்தேன். (மருந்தின் பெயரை மருத்து வாசகர்களின் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்).
'
ஒரு வாரம் பொறுத்து அந்த அன்பர் மீண்டும் வந்தார்.
'
‘அதிசயம் அய்யா’
'
‘சொல்லுங்கள்’
'
‘இது புனிதமான ரமலான் மாதம். எங்கள் ஊரில் விடியற்காலை மூன்று மணிக்கு தெருவில் நகாடா வாசித்து யாவரையும் துயில் எழுப்பும் வழக்கம் உண்டு. நீங்கள் மருந்து கொடுத்த இரண்டாம் நாள் என் மனைவி என்னை உறக்கத்திலிருந்து எழுப்பினாள். நகாடா அறைகிறதே கேட்கவில்லையா? தொழுகைக்கு தயார் ஆக வேண்டுமே. எனக்கு உடல் புல்லரித்துப் போயிற்று. இத்தனை ஆண்டுகளாக இதுநாள் வரையில் தம்பட்டம் ஒலித்துள்ளது. அதை அவள் செவியுற்றதேஇல்லை. இன்று தெளிவாகக் கேட்டிருக்கிறாள். மேலும் தற்போது குழறாமல் பல சொற்களை உச்சரிக்கிறாள், உங்களுக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே புரியவில்லை?
'
‘எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். அது மேதை ஹானிமனுக்கு உரித்தாகும்’ அடக்கமாய்ப் பதிலிறுத்தேன்.
'
‘மூங்கையான் பேசலுற்றான்’ என்ற சொற்றொடரைக் கம்ப நாடன் உரைக்கின்றான். ‘மூகம் கரோதி வாசாலம்’ என்று தியான சுலோகம் பேசும். இத்தகைய பேரதிசயங்கள் ஹோமியோபதி மருத்துவத் துறையில் மட்டுமே நிகழக்கூடும். சுரப்பிகளே இயங்காத நிலையில் உள்ள மந்தமான சிறுவனுக்கு வியர்வைச் சுரப்பிகளை ஊக்கி வைத்து எல்லோரையும் வியக்கச் செய்தவர் மருத்துவ மேதை த.சா.ராசாமணி அவர்கள்.
இந்த வாய்ப்புகளை வெளியிடத்தான் எந்த நாளேட்டிலும் இடமில்லை. 
‘பூவிலே உயர்ந்த பூ? என்று கவிதை பாடத்தான் அவர்களுக்குத் தெரியும்.
'
இந்த நிலைக்கு நமது முந்தைய மருத்துவர்களையும்தான் குறை கூறுவேன். அவர்கள் ஆழ்ந்து படிப்பதில்லை. சிந்திப்பதில்லை, விவாதிப்பதும் இல்லை. தெளிவான, பயனுள்ள எண்ணங்களைப் பரப்ப நம்மிடையே நல்ல ஏடுகளும் இல்லை.
'
மிகினும், குறையினும் துயர் செய்யும் என்றும் 
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 
என்று துணிவுடன் வரைந்த வள்ளுவப் பெருந்தகைக்கு நன்றி கூறுகிறேன்.
'
'
***
ஹோமியோபதி அற்புதங்கள் 
புத்தகத்திலிருந்து
***********
மேஜர் தி.சா.இராஜூவின் அற்புதங்கள் தொடரும்............